Sunday, February 7, 2010

2, பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்

2, பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
- மார்க்ஸ் - எங்கெல்ஸ்
[கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை]


ஒட்டுமொத்தமாய்ப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் உறவு என்ன?

கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்க கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாய் இருக்கவில்லை.

அவர்கள் பாட்டாளி வாக்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள்.

ஏனைய தொழிலாளி வாக்கக் கட்சிகளிடமிருந்து, கம்யூனிஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டுமே தான் : 1. வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும்போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்தும் உரித்தான் பொது நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னிலைக்குக் கொண்டு வருகிறார்கள். 2. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம்கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்கிறார்கள்.

ஆகவே நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்; தத்துவார்த்தத்தில் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழிநடப்பையும் பொதுவான இறுதிவிளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தை, பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத அனுகூலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்களுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவே அதுவேதான்: பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப் பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதும் தான்.

கம்யூனிஸ்களுடைய தத்துவார்த்த முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்தமைத்தோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துகளை அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாய்க் கொண்டவையல்ல.

நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன. நடப்பிலுள்ள சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது எவ்விதத்திலும் கம்யூனிசத்துக்கு உரித்தான ஒரு தனிச் சிறப்பல்ல.

வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாய்ச் சொத்துடைமை உறவுகள் யாவும் கடந்த காலத்தில் தொடர்ந்தாற்போல் வரலாற்று வழியில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன.

எடுத்துக்காட்டாய் பிரெஞ்சுப் புரட்சியானது பிரபுத்துவச் சொத்துடைமையை ஒழித்து அதனிடத்தில் முதலாளித்துவச் சொத்துடைமையை நிலைநாட்டிற்று.

பொதுப்பட சொத்துடைமையை ஒழிப்பதல்ல, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்திற்குரிய சிறப்பியல்பு. ஆனால் நவீன முதலாளித்துவத் தனிச் சொத்துடைமையானது வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில், ஒருசிலர் மிகப் பலரைச் சுரண்டுவதன் அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்தற்கும் சுவீகரிப்பதற்குமான அமைப்பின் இறுதியான, மிகவும் நிறைவான வெளிப்பாடாகும்.

இந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்டுகளுடைய தத்துவத்தை இரத்தனச் சுருக்கமாய், தனிச் சொத்துடைமையை ஒழித்திடல் என்பதாய்க் கூறலாம்.

ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்; இந்தத் தனிச் சொத்துதான் தனியாளின் சுதந்திரம், செயற்பாடு, சுயேச்சை வாழ்வு ஆகியவற்றுக்கு எல்லாம் அடிநிலை என்கிறார்கள்.

பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது! இங்கே நீங்கள் குறிப்பிடுவது எந்தச் சொத்து? சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரது சொத்தா? அதாவது முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முற்பட்டதாகிய சொத்து வடிவமா? இம்மாதிரியான சொத்தை இழிக்கத் தேவை இல்லை; தொழில் வளர்ச்சியானது இதை ஏற்கனவே பெருமளவுக்கு அழித்து விட்டது, இனியும் தொடர்ந்து நாள்தோறும் அழித்து வருகிறது.

அல்லது நவீன கால முதலாளித்துவத் தனிச் சொத்தையா குறிப்பிடுகிறீர்கள்?

ஆனால் கூலியுழைப்பானது பாட்டாளிக்குச் சொத்தையா படைத்தளிக்கிறது? இல்லவே இல்லை. அது படைப்பது மூலதனம்தான்; அதாவது கூலியுழைப்பைச் சுரண்ருவதும், புதிதாய்ச் சுரண்டுவதற்குப் புதிதாய்க் கூலியுழைப்பு கிடைக்காவிடில் அதிகரிக்க முடியாததுமாகிய சொத்து வகைதான். சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான பகைமையை அடிப்படையாய்க் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரு தரப்புகளையும் பரிசீலிப்போம்.

முதலாளியாய் இருப்பதற்கு அர்த்தம் பொருளுற்பத்தியில் தனியாள் வழியில் மட்டுமின்றி சமூக வழியிலுமான அந்தஸ்து வகிப்பதாகும். மூலதனமானது கூட்டுச் செயற்பாட்டினால் விளைவதாகும்; சமுதாயத்தின் பல உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இறுதியாய்ப் பார்க்குமிடத்து சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே அதை இயங்க வைக்க முடியும்.

எனவே மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்தி.

ஆகவே மூலதனமானது பொதுச் சொத்தாய், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்குமான சொத்தாய் மாற்றப்படும் போது, தனியாளின் சொத்து அதன் மூலம் சமூகச் சொத்தாய் மாற்றப்படவில்லை. சொத்தின் சமூகத் தன்மை தான் மாற்றப்படுகிறது. சொத்தானது அதன் வர்க்கத்தன்மையை இழந்துவிடுகிறது.

இனி கூலியுழைப்பைப் பரிசீலிப்போம்.

கூலியுழைப்பின் சாராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலி, அதாவது தொழிலாளி தொழிலாளியாய்த் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாய்த் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் மொத்த அளவு. ஆகவே கூலித் தொழிலாளி தமது உழைப்பின் மூலம் சுவீகரித்துக் கொள்வது எல்லாம், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் இவ்வாழ்வினைப் புனருற்பத்தி செய்வதற்கும் மட்டும்தான் போதுமானது. உழைப்பின் உற்பத்திப் பொருsகளிலான இந்தத் தனியாள் சுவீகரிப்பை, மனித உயிர் வாழ்வின் பராமரிப்புக்காகவும் புனருற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டும் அளித்து, ஏனையோரது உழைப்பின் மீது ஆண்மை செலுத்த உபரியாய் எதையும் விட்டு வைக்காத இந்தச் சுவீகரிப்பை ஒழிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை. இந்தச் சுவீகரிப்பின் இழவான தன்மையைத்தான், மூலதனத்தைப் பெருகச் செய்வதற்கு மட்டுமே தொழிலாளி வாழ்கிறான், ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும்வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் ஒழித்திட விரும்புகிறோம்.

முதலாளித்துவ சமுதாயத்தில் உயிருள்ள உழைப்பு சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பைப் பெருகச் செய்வதற்குரிய ஒரு சாதனமாகவே இருந்து வருகிறது. கம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது தொழிலாளியின் வாழ்வை விரிவுபெற்று வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும்.

ஆகவே முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ் காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது; கம்யூனிச சமுதாயத்தில் நிகழ் காலம் கடந்த காலத்தின் மீது ஆதிக்கம் புரியும். முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம் சுயேச்சையானதாய், தனித்தன்மை கொண்டதாய் இருக்கிறது; அதேபோது உயிருள்ள ஆள் சுயேச்சையற்றவனாய், தனித்தன்மை இல்லாதவனாய் இருக்கின்றான்.

இப்படிப்பட்ட உறவுகளை ஒழிப்பதைத்தான் தனியாளது தனித்தன்மையின் ஒழிப்பாய், சுதந்திரத்தின் ஒழிப்பாய்க் கூறுகிறார்கள் முதலாளிகள்! சந்தேகம் வேண்டாம், முதலாளித்துவத் தனித்தன்மையையும் முதலாளித்துவ சுயேச்சையையும் முதலாளித்துவ சுதந்திரத்தையும் ஒழிப்பதுதான் குறிக்கோள்.

தற்போதுள்ள முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளில், சுதந்திரம் என்பதற்குசுதந்திரமான வாணிபம், சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் என்றே அர்த்தம்.

ஆனால் விற்பனையும் வாங்குதலும் மறையும் போது சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் கூடவே மறைந்துபோகும். சுதந்திரமான விற்பனை, வாங்குதல் என்ற பேச்சுக்கும் பொதுப்பட சுதந்திரத்தை பற்றிய நமது முதலாளித்துவ வர்க்கத்தாரது ஏனைய எல்லாத் "தீரச் சொல்வீச்சுகளுக்கும்" எதாவது அர்த்தம் இருfகுமாயின், அது மத்திய காலத்திய கட்டுண்ட விற்பனையுடனும் வாங்குதலுடனும் வணிகர்களுடனும் ஒப்பிடும்போது மட்டும்தான். ஆனால் விற்பனையும் வாங்குதலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளும், இவற்றோடு முதலாளித்துவ வர்க்கமுங்கூட கம்யூனிசத்தின் மூலம் ஒழிக்கப்படுவதற்கு எதிராய் முன்வைக்கப்படுகையில் இந்தப் பேச்சுகள் யாவும் அர்த்தமற்றுப் போகின்றன.

தனிச்சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச் சொத்து ஏற்கனவே இல்லாமல் ஒழிக்கப்பட்விட்டது; ஒருசிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லா தொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்.

சுருங்கச் சொல்வதெனில், உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.

எத்தருணம் முதல் உழைப்பை மூலதனமாய், பணமாய், நிலவாடகையாய் - ஏகபோகமாக்கிக் கொண்டுவிடுவதற்கு ஏற்ற ஒரு சமூக சக்தியாய் - மாற்ற முடியாமற் போகிறதோ, அதாவது எத்தருணம் முதல் தனியாளின் சொத்தினை முதலாத்துவச் சொத்தாய், மூலதனமாய் மாற்ற முடியாமற் போகிறதோ, அத்தருணம் முதற்கொண்டே தனியாளின் தனித்தன்மை மறைந்து விடுவதாய் நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆதலார் "தனியாள்" என்னும் போது நீங்கள் முதலாளியையே தவிர, மத்தியதர வர்க்கச் சொத்துடைமையாளரையே தவிர, வேறு யாரையும் குறிப்பிடவில்லை எனபதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இம்மாதிரியான தனியாள் மெய்யாகவே மறையத்தான் வேண்டும். இம்மாதிரியான தனியாள் மெய்யாகவே மறையத்தான் வேண்டும், இருக்க முடியாதபடிச் செய்யப்படத்தான் வேண்டும்.

சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்களைச் சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை; இப்படிச் சுவீகரித்துக் கொள்வதன் மூலம் அவன் ஏனையோரது உழைப்பை அடிமைப் படுத்துகிறவனாகும் வாய்ப்பைத்தான் அது அவனிடமிருந்து பறிக்கிறது.

தனிச் சொத்தை ஒழித்ததும் எல்லாச் செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது.

இது மெய்யானல், முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை. மூலதனம் இல்லாமற் போகும் போது கூலியுழைப்பு இருக்க முடியாதென்ற ஓருண்மையையே திருப்பித் திருப்பிப் பலவாறாய்ச் சொல்லும் கூற்றே ஆகும் இந்த ஆட்சேபம் அனைத்தும்.

பொருளாயதப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராய் எழுப்பப்படும் எல்லா ஆட்சேபங்களும், அறிவுத் துறைப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராகவும் எழுப்பப்படுகின்றன. எப்படி வர்க்கச் சொத்துடைமையின் மறைவு முதலாளிக்குப் பொருளுற்பத்தியே மறைந்து போவதைக் குறிப்பதாகின்றதோ, அதே போல வர்க்கக் கலாசாரத்தின் மறைவு அவருக்கு எல்லாக் கலாசாரமுமே மறைவதற்கு ஒப்பானதாகின்றது.

அழிந்து விடுமென அவர் அழுது புலம்பும் அந்தக் கலாசாரம் மிகப் பெருவாரியான மக்களுக்கு இயந்திரமாய்ச் செயல்படுவதற்கு வேண்டிய பயிற்சியாகவே இருந்து வருகிறது.

ஆனால் முதலாளித்துவச் சொத்துடைமையின் ஒழிப்பை நீங்கள் சுதந்திரத்தையும் கலாசாரத்தையும் சட்டநெறியையும் இன்ன பிறவற்றையும் பற்றிய உங்களது முதலாளித்துவக் கருத்துகளைப் பிரமாணமாய்க் கொண்டு மதிப்பீடு செய்யும் வரை எங்களுடன் சர்ச்சைக்கு வர வேண்டாம். உங்களுடைய சட்டநெறி உங்கள் வர்க்கத்தின் சித்தத்தை எல்லாருக்குமான சட்டமாய் விதித்திடுவதுதான்; உங்களது இந்தச் சித்தத்தின் சாரத்தன்மையும் போக்கும் உங்களது வர்க்கம் நிலவுதற்கு வேண்டிய பொருளாதார நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறவைதாம். இதே போல் உங்கள் கருத்துகள் எல்லாமே உங்களது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சொத்துடைமைக்கும் வேண்டிய நிலைமைகளிலிருந்து பிறந்தெழுகிறவைதாம்.

தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக அமைப்பு வடிவங்களை, பொருளுற்பத்தியின் முன்னேற்றத்தின் போது வரலாற்று வழியில் தோன்றி மறைந்து போகம் உறவுகளாகிய இவற்றை, என்றும் நிலையான சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னலக் கருத்தோட்டம் உங்களைத் தூண்டுகிறது. இந்தத் தவறான கருத்தோட்டம் உங்களுக்கு மட்டும் உரியதன்று, உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வர்க்கங்கள் யாவற்றுக்குமே உரியதாய் இருந்தது தான். பண்டைக்காலத்துச் சொத்துடைமையைப் பொறுத்தவரை நீங்கள் தெட்டத்தெளிவாய் காண்பதை, பிரபுத்துவச் சொத்துடைமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை, உங்களுடைய முதலாளித்துவச் சொத்துடைமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை, நீங்கள் தடுக்கப்பட்டுவிடுகிறீர்கள்.

குடும்பத்தை ஒழிப்பதாவது! கம்யூனிஸ்களுடைய இந்தக் கேடுகெட்ட முன்மொழிவை எதிர்த்து அதிதீவிரவாதிகளுங்கூட கொதித்தெழுகிறார்கள்.

இக்காலத்துக் குடும்பத்துக்கு, முதலாளித்துவக் குடும்பத்துக்கு, அடிப்படையாய் அமைவது எது? மூலதனம் தான், தனியார் இலாபம் தான். இந்தக் குடும்பம் அதன் முழுவளர்ச்சியிலுமான வடிவில் முதலாளித்துவ வர்ககத்தாரிடையே மட்டும்தான் இருந்து வருகிறது. ஆனால் இந்நிலைமையின் உடன்நிகழ்வாய் குடும்பவாழ்வு பாட்டாளிகளிடத்தே அனேகமாய் அற்றுப் போயிருப்பதையும், பொது நிலையிலான விபசாரத்தையும் காண்கிறோம்.

முதலாளித்துவக் குடும்பத்தின் உடன்நிகழ்வு மறையும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும், மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்துவிடும்.

குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான், ஒப்புக் கொள்கிறோம்.

ஆனால் வீட்டுக் கல்விக்குப் பதிலாய் நாங்கள் சமூக முறையிலான கல்வியைப் புகுத்தி மனிதர்களிடையிலான உறவுகளிலேயே மிகப் புனிதமானவற்றை நாசமாக்க விரும்புகிறோம் என்பீர்கள்.

உங்களுடைய கல்வி இருக்கிறதே, அது மட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே? எந்தச் சமூக நிலைமைகளில் நீங்கள் கல்வி போதிக்கிறீர்களோ அந்த நிலைமைகளாலும், பற்றிக்கூடங்கள் மூலமும் இன்ன பிறவற்றின் மூலமும் சமுதாயத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தலையீட்டாலும் தீர்மானிக்கப்பட்டதுதானே அது? கல்வியில் சமுதாயம் தலையிடும் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டு பிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்.

குடும்பம், கல்வி என்றும், பெற்றோருக்கும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றன; ஏனெனில் நவீனத் தொழில் துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கிவிடுவீர்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகிறது.

முதலாளியாய் இருப்பவர் தனது மனையியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கிறார். உற்பத்திக் கருவிகள் எல்லார்க்கும் பொதுவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படக் போவதாய்க் கேள்விப்பட்டதும், உடனே அவர் எல்லார்க்கும் பொதுவாகிவிடும் இதே கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்து கொண்டுவிடுகிறார்.

பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும், உண்மையில் இதுதான் நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருத முடியாத ஒன்றாகும்.

இருப்பினும், பெண்களைக் கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும் அதிகார பூர்வமாகவும் எல்லார்க்கும் போதுவாக்கப் போகிறார்களென நமது முதலாளிமார்கள் புரளி பண்ணி நல்லொழுக்கச் சீலர்களாய் சீற்றம் கொள்கிறார்களே, அதைக் காட்டிலும் நகைக்கத்தக்கது எதுவும் இருக்க முடியாது. பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கும் கைங்கரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை, நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகிறது.

நமது முதலாளிமார்கள் சாதாரண விபசாரிகளிடம் செல்வதைச் சொல்லவே வேண்டாம், அதோடு அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளது மனைவியரும் பெண்டிரும் போதாமல் தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் வசப்படுத்திக் கள்ளவொழுக்கம் கொள்வதில் ஆகப் பெரிய இன்பம் காண்கிறார்கள்.

முதலாளித்துவத் திருமணமானது உண்மையில் மனைவியரைப் பொதுவாக்கிக் கொள்ளும் ஒரு முறையே ஆகும். ஆகவே கள்ளத்தனமாய்த் திரைமறைவில் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி வைக்கும் முறைக்குப் பதில், ஒளிவு மறைவற்ற சட்டபூர்வ முறையைக் கொண்டுவர விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள என்று இவர்கள் கண்டிக்கலாமே தவிர அதிகமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும் போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் - அதாவது பகிரங்கப் பொது விபசாரமும் இரகசியத் தனி விபசாரமும்- கூடவே ஒழிந்தே ஆகவேண்டும் என்பது தெளிவு.

மேலும் தாய்நாட்டையும் தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

தொழிலாளர்களுக்குத் தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாதகாரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும், தேசத்தன் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அதுவரை பாட்டாளிவர்க்கம் தேசியத் தன்மை கொண்டாகவே இருக்கிறது, ஆனால் இச்சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல.

முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி, வாணிபச் சுதந்திரம், அனைத்துலகச் சந்தை, பொருளுற்பத்தி முறையிலும் இம்முறைக்கு உரித்தான வாழ்க்கை நிலைமைகளிலும் நாடுகள் ஒருபடித்தானவை ஆதல் - இவற்றின் காரணமாய் வெவ்வேறு நாடுகளது மக்களுக்கும் இடையிலுள்ள தேசிய வேறுபாடுகளும் பகைமைகளும் நாள்தோறும் மேலும் மேலும் மறைந்து வருகின்றன.

பாட்டாளி வர்க்க மேலாண்மையானது இவற்றை மேலும் துரிதமாய் மாறயச் செய்யும். குறைந்தது தலைமையான நாகரிக நாடுகளின் அளவிலாவது அமைந்த செயல் ஒற்றுமை, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய தலையாய நிபந்தனைகளில் ஒன்றாகும்.

தனியொருவர் பிறர் ஒருவரைச் சுரண்டுதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு ஒரு தேசம் பிறிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அதே அளவுக்குத் தேசங்களுக்கிடையிலான பகைமையும் இல்லாதொழியும்.

சமயத்தின், தத்துவவியலின், பொதுவாய்ச் சித்தாந்தத்தின் நோக்குநிலையிலிருந்து கம்யூனிசத்துக்கு எதிராய்க் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விவரமாய்ப் பரிசீலிக்கத் தக்கவையல்ல.

மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் - சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது- அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் பேண்டுமா, என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆத்கிகம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக்கின்றன.

சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துரவாக்கப்பட்டுவிட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறர்கள்.

பண்டைய உலகு அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறிஸ்தவ சமயம் வெற்றி கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமயக் கருத்துகள் அறிவொளி இயக்கக் கருத்துகளுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சிவர்ககமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. சமயத் துறை சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துகள் கட்டற்ற சுந்திரப் போட்டியின் ஆதிக்கத்தினது அறிவு உலகப் பிரதிமைகளே ஆகும்.

"வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்கநெறி, தத்துவவியல், சட்டநெறி இவை சம்பந்தமான கருத்துகள் உருத்திரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்கநெறியும் தத்துவவியலும் அரசியல் விஞ்ஞானமும் சட்டமும் இந்த மாற்றங்களால் ஆழிந்துபடாது எப்போதுமே இவற்றைச் சமாளித்து வந்திருக்கின்றன" என்று நம்மிடம் கூறுவார்கள்.

"இதன்றி சுதந்திரம், நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன, இவை சமுதாயத்தின் எல்லாக் கட்டங்களுக்கும் பொதுவானவை. ஆனால் கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது; சமயம், ஒழுக்கநெறி ஆகிய அனைத்தையும் புதிய அடிப்படையில் அமைப்பதற்குப் பதில் இவற்றை ஒழித்துக் கட்டிவிடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்துக்கும் முரணாய்ச் செயல்படுகிறது."

இந்தக் குற்றச்சாட்டில் அடிங்கியுள்ள சாரப்பொருள் என்ன? கடந்த கால சமுரயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் பகைமைகளில் இயக்கமாய் இருந்திருக்கிறது, இந்தப் பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கின்றன.

ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்ற வடிவம் எதுவானாலும், சமுதாயத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பது கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் பொதுவான உண்மையாகும். எனவே, கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாகவும் இருந்திருப்பினும், வர்க்கப் பகைமைகள் அறவே மறைந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொது வடிவங்கள் அல்லது பொதுவான கருத்துகளின் வட்டத்தினுள்ளே தான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது, இதில் வியப்பு ஏதுமில்லை.

கம்யூனிசப் புரட்சி பாரம்பரியச் சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய்த் துண்டித்துக் கொண்டுவிடும் புரட்சியாகும், ஆகவே இந்தப் புரட்சியினது வளர்ச்சியின் போது பாரம்பரியக் கருத்துகளிடமிருந்து மிகவும் தீவிரமாய்த் துண்டித்துக் கொள்ளும்படி நேர்வதில் வியப்புக்கு இடமில்லை.

போதும், கம்யூனிசத்தை எதிர்த்து எழுப்பப்படும் முதலாளித்துவ ஆட்சேபங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஐனநாயத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்ககம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி என்பதை மேலே கண்டோம்.

பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்ககமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழுவேகத்தில் அதிகமாக்கும்.

ஆரம்பத்தில் இந்தப் பணியினைச் சொத்துடைமை உரிமைகளிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளிலும் எதேச்சாதிகார முறையில் குறுக்கிட்டுச் செயல்படுவதன் மூலம்தான் நிறைவேற்ற முடியும். அதாவது, பொருளாதார வழியில் போதாமலும் வலுக் குறைவாகவும் தோன்றும் நடவடிக்கைகளாய் இருப்பினும், இயக்கப் போக்கின் போது தம்மை மிஞ்சிச் சென்றுவிடுகிறவையும் பழைய சமூக அமைப்பினுள் மேலும் குறுக்கிடும்படியான அவசியத்தை உண்டாக்குகிறவையுமாகிய நடவடிக்கைகள் மூலம்தான், பொருளுற்பத்தி முறையைப் புரட்சிகரமாய அடியோடு மாற்றியமைத்திடும் பாதையில் தவிர்க்க முடியாதவையாகிய இந்நடவடிக்கைகள் மூலம்தான், இந்தப் பணியினை நிறைவேற்ற முடியும்.

இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறானவையாகவே இருக்கும்.

ஆயினும் மிகவும் வளர்ந்து முன்னேறிய நாடுகளுக்குப் பொதுவாய்ப் பெருமளவுக்குப் பொருந்தக் கூடிய நடவடிக்கைககள் வருமாறு:

1. நிலத்தில் சொத்துடைமையை ஒழித்தலும் நிலவாடகைகள் அனைத்தையும் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தலும்.

2. கடுமையான வளர்வீத அல்லது படித்தர வருமான வரி.

3. பரம்பரை வாரிசாய்ச் சொத்துடைமை பெறும் உரிமை அமைத்தையும் ஒழித்தல்.

4. நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோர், கலகக்காரர்கள் ஆகியோர் எல்லோரது சொத்தையும் பறிமுதல் செதல்.

5. அரசு மூலதனத்துடன் தனியுரிமையான ஏகபோகம் கொண்ட தேசிய வங்கியின் மூலமாய், கடன் செலாவணியை அரசிய் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.

6. செய்தித் தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.

7. பொதுத் திட்டத்தின் பிரசாரம் ஆலைகளையும் உற்பத்திக் கருவிகளையும் விரிவாக்குதலும், தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவருதலும், பொதுவாய் மண் வளத்தை உயர்த்தலும்.

8. உழைப்பைச் சரிசமமாய் எல்லாருக்கும் உரிய கடமையாக்குதல், முக்கியமாய் விவசாயத் துறைக்காகத் தொழிற் பட்டாளங்களை நிறுவுதல்.

9. விவசாயத்தைத் தொழில் துறையுடன் இணைத்தல், தேச மக்களை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவியமையச் செய்வதன் மூலம் நகரத்துக்கும் கிரமப்புறத்துக்கும் இடையிலான பாகுபாட்டைப் படிப்படியாய் அகற்றுதல்.

10. எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல். ஆலைகளில் குழந்தைகளது உழைப்பின் தற்போதைய வடிவை ஒழித்திடல். கல்வியைப் பொருள் உற்பத்தியுடன் இணைத்தல், இன்ன பிற.

வளர்ச்சியின் போது வர்க்க பேதங்கள் மறைந்துவிடும் போதும், தேச மக்கள் அனைவராலுமான மாபெரும் கூட்டமைப்பின் கைகளில் பொருளுற்பத்தி அனைத்தும் ஒருசேர மையமுற்றுவிடும் போதும், பொது ஆட்சியதிகாரம் அதன் அரசியல் தன்மையை இழந்துவிடும். அரசியல் ஆட்சியதிகாரம் என்பது அதன் சரியான பொருளில், ஒரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக அமைந்த பலவந்த அதிகாரத்தையே குறிக்கின்றது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் சந்தர்ப்பங்களது நிர்ப்பந்தம் காரணமாய்த் தன்னை ஒரு வர்க்கமாய ஒழுங்கமைத்துக் கொள்கிறதெனில், புரட்சியின் மூலம் தன்னை ஆளும் வர்க்கமாக்கிக் கொள்கிறதெனில், ஆளும் வர்க்கம் என்ற முறையில் பழைய பொருளுற்பத்தி உறவுகளைப் பலவந்தமாய் ஒழித்திடுகிறதெனில், அப்போது அது இந்தப் பழைய பொருளுற்பத்தி உறவுகளுடன் கூடவே வர்க்கப் பகைமைகளும் பொதுவாய் வர்க்கங்களும் நிலவுதற்குரிய நிலைமைகளையும் ஒழித்திடுவதாகிறது, அதன் மூலம் அது ஒரு வர்க்கமாய்த் தனக்குள்ள மேலாண்மையையும் ஒழித்திடுவதாகிறது.

வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்டிருந்த பழைய முதலாளித்துவ சமுதாயத்துக்குப் பதிலாய், ஒவ்வொருவரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதையே எல்லாரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதற்குகான நிபந்தனையாய்க் கொண்ட மக்கட்கூட்டு ஒன்று எழுந்துவிடும்.

No comments:

Post a Comment