மார்க்ஸ் பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய கடிதம் - கா.மார்க்ஸ்
[புரூதோனைப் பற்றி] பிரஸ்ஸல், டிசம்பர் 28, [1846]
அன்பார்ந்த திரு.ஆன்னென்கவ் அவர்களுக்கு,
உங்கள் நவம்பர் 1ம் தேதிய கடிதத்தில் எனது பதில் வெகு நாளைக்கு முன்பே நீங்கள் பெற்றிருக்க வேண்டியது, ஆனால் திரு.புரூதோனின் "வறுமையின் மெய்யறிவு" எனும் நூலை எனது புத்தகக் கடைக்காரர் சென்ற வாரந்தான் எனக்கு அனுப்பி வைத்தார். அதைப் பற்றிய எனது கருத்தைத்தங்களுக்கு உடனே தெரிவிப்பதற்காக இரண்டே நாளில் படித்து முடித்தேன். அந்நூலை மிக அவசரமாகப் படித்துள்ளாதால் விபரங்களில் நான் இறங்க முடியாது, அதைப்பற்றி எனக்கு ஏற்பட்ட பொதுவான கருத்தை மட்டுந்தான் நான் சொல்ல முடியும். நீங்கள் விரும்பினால் இரண்டாவது கடிதத்தில் நான் விபரங்களில் இறங்க முடியும்.
மொத்தத்தில் அந்நூல் மோசமானது, மிக மோசமானது என்று நான் மனந்திறந்து சொல்லித் தீர வேண்டும். இந்த வடிவ ஒழுங்கில்லாத படாடோபமான நூலில் திரு.புரூதோன் விளம்பரப்படுத்திக் கொள்கிற "ஜெர்மன் மெய்யறிவு பாற்பட்ட ஒட்டுத்தையலை" பற்றி நீங்களே உங்கள் கடித்தில் நகைக்கிறீர்கள், ஆனால் பொருளாதார ஆய்வு மெய்யறிவின் விஷத்தால் கெட்டுவிடவில்லை என்று கருதுகிறீர்கள். பொருளாதாரவாதத்திலுள்ள பிழைகளைத் திரு.புரூதோனின் மெய்யறிவுக்குக் கற்பிக்க நானும் முன்வரவில்லை. திரு.புரூதோன் ஒரு அபத்தமான மெய்யறிவுத் தத்துவத்தைக் கொண்டிருப்பது அவர் நமக்கு அரசியல் பொருளாதாரம் பற்றிய பொய்யான விமர்சனம் கொடுப்பதற்குக் காரணமல்ல, அவர் நமக்கு ஓர் அபத்தமான மெய்யறிவுத் தத்துவம் கொடுப்பதற்குக் காரணம் இன்றையச் சமுதாய அமைப்பு முறையை அதன் சங்கிலித் தொடரான இயக்கத்திலே - ஃபூரியேயிடமிருந்து இவ்வார்த்தையை எடுத்துப் பயன்படுத்துகிறேன் - அவர் புரிந்து கொள்ளத் தவறுகிறார்.
இறைவனைப் பற்றியும், உலகளாவிய பகுத்தறிவு பற்றியும், மனிதகுலத்தின் நபர்சார்பற்ற, பிழையறியாத பகுத்தறிவு பற்றியும், அது எப்போதும் எல்லாச் சகாப்தங்களிலும் தனக்குத் தானே நிகராக இருக்கிறதாகவும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு ஒருவனுக்கு அதைப் பற்றிச் சரியான உணர்வு மட்டும் இருந்தால் போதுமென்றும் திரு.புரூதோன் ஏன் பேசுகிறார்? ஓர் ஆழ்ந்த சிந்தனையாளராகக் காட்டிக் கொள்வதற்காக அவர் ஏன் ஆழமற்ற ஹெகல்வாதத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்?
இந்தப் புதிய அவரே தடயம் அளிக்கிறார். திரு.புரூதோன் வரலாற்றிலே ஒரு சமுதாய நிகழ்ச்சி வளர்ச்சிகளின் வரிசைத் தொடரைக் காண்கிறார், வரலாற்றிலே முன்னேற்றம் நடைமுறையாகியுள்ளதைக் காண்கிறார், கடைசியாக, தனிநபர்கள் என்கிற முறையில் மனிதர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே அறியாதவர்களாகவும் தமது சொந்த இயக்கத்தையே தவறாகப் புரிந்து கொண்டிருப்பவர்களாகவும் காண்கிறார் - அதாவது, முதல் நோட்டத்திலே தெரிகிறபடி, அவர்களின் சமுதாய வளர்ச்சியானது, அவர்களின் தனித்தனி வளர்ச்சியிலிருந்து வேறுபட்டும், பிரிந்தும் சுயேச்சையோடும் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த விஷயங்களை அவரால் விளக்க முடியவில்லை, எனவே உலகளாவிய பகுத்தறிவு தன்னைத் தானே நிதர்சனப்படுத்திக் கொள்கிறதாக ஒரு ஊகப் பிரமாணத்தை வெறுமே புனைந்து விடுகிறார். மாயமான காரணங்களை, அதாவது பொது அறிவு போதாச் சொற்றொடர்களைப் பனைவது போன்ற சுளுவான வேலை வேறொன்றில்லை.
ஆனால், திரு.புரூதோன மனிதகுலத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றித் தமக்கு ஒன்றும் புரியவில்லை என்று ஒப்புக் கொள்கிற போது - உலகளாவிய பகுத்தறிவு, இறைவன் என்றெல்லாம் படாடோபமான சொற்களைப் பயன்படுத்தி இதை அவர் ஒப்புக் கொள்கிறார், - பொருளாதார வளர்ச்சியைப் புரிந்து கொள்ளத்தமக்குத் திராணி இல்லை என்று அவர் உட்கிடையாகவும் அவசியமாகவும் ஒப்புக்கொள்ளவில்லையா?
என்ன வடிவத்திலிருந்தாலும் சரியே, சமுதாயம் என்பது என்ன? மக்களின் பரஸ்பரச் செய்கையின் விளைபயனே. மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமுதாயத்தைத் தேர்ந்து கொள்ளச் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. மனிதர்களின் உற்பத்திச் சக்திகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அனுமானித்துக் கொள்ளுங்கள், வர்த்தகம் நுகர்வு பற்றிய ஒரு குறிப்பிட்ட வடிவம் உங்களுக்குக் கிடைக்கும். உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் நுகர்விலும் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களை அனுமானித்துக் கொள்ளுங்கள், அவற்றிற்கப் பொருத்தமான ஒரு சமுதாய அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பும் - சுருங்கச் சொன்னால், ஒரு பொருத்தமான குடியுரிமைச் சமுதாயம் - உங்களுக்குக் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட குடியுரிமைச் சமுதாயத்தை அனுமானித்துக் கொள்ளுங்கள், அந்தக் குடியுரிமைச் சமுதாயத்தின் வெறும் அதிகாரபூர்வமான வெளிப்பாடாக இருக்கிற குறிப்பிட்ட அரசியல் அமைப்பு உங்களுக்குக் கிடைக்கும். இதைத் திரு.புரூதோன் என்றைக்கும் புரிந்து கொள்ள மாட்டார், ஏனெனில் அரசு எனும் நிலையில் நின்றுகொண்டு சமுதாயத்துக்கு - அதாவது, சமுதாயத்தைப் பற்றிய ஆதிகாரபூர்மான பொழிப்பினை நிலையில் நின்றுகொண்டு அதிகாரபூர்வமான சமுதாயத்துக்கு - வேண்டுகோள் விடுப்பதில் தாம் பெரிதாக ஏதோ செய்வதாக அவர் நினைத்துக் கொள்கிறார்.
தமது வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பொருளாதாரச் சக்திகளைத் தேர்ந்து கொள்ள மனிதர்கள் சுதந்திரமுள்ளவர்களாயில்லை என்று மேற்கொண்டு சொல்லத் தேவையில்லை, ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும், முந்தைய நடவடிக்கையின் விளைபயனே ஆகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும், ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகாளாலும் அவர்களுக்கு முன்பே - அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு- இருந்து வரும் சமுதாய வடிவத்தாலும் நிர்ணயிக்கபட்டுள்ளது. பின்னிட்டு வரும் ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையால் பெறப்பட்ட உற்பத்திச் சக்திகளைக் கைவரப் பெறுகிறது, அது புதிய உற்பத்திக்குரிய மூலப்பொருளாக அதற்குப் பயன்படுகிறது, இந்த எளிய உண்மையின் காரணமாக மனித வரலற்றிலே ஒரு கூட்டுப்பொருத்தம் உண்டாகிறது, மனிதகுலத்தின் வரலாறு உருப்பெறுகிறது, மனிதனின் உற்பத்திச் சக்திகளும் எனவே அவனுடைய சமுதாய உறவுகளும் எவ்வளவுக் கெவ்வளவுக் அதிகமாக வளர்க்கப் பெற்றுள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு வரலறானது மனிதகுல வரலாறாக அமைகிறது. எனவே, மனிதர்களின் சமுதாய வரலாறு எனப்பட்டது எப்போதும் அவர்களின் தனிநபர் வளர்ச்சியின் - அதை அவர்கள் உணர்ந்திருந்தாலும் இராவிட்டாலும் சரி - வரலாறு தவிர வேறில்லை. அவர்களின் பொருளாயத உறவுகளே அவர்களின் உறவுகளனைத்துக்கும் அடிப்படை. இந்தப் பொருளாயத உறவுகள் அவசியகரமான வடிவங்கள் மட்டுமே, அவற்றில் அவர்களுடைய பொருளாயத மற்றும் தனிநபர் வவைப்பட்ட செயல்கள் நடக்கின்றன.
திரு.புரூதோன் கருத்துக்களையும் பொருட்களையும் கலந்து குழுப்புகிறார். மனிதர்கள் தாங்கள் வென்று கொண்டிதை என்றைக்கும் விட்டுக் கொடுப்பதில்லை, ஆனால் இதற்குப் பொருள் அவர்கள் எந்தச் சமுதாய வடிவத்தில் சில உற்பத்திச் சக்திகளைப் பெற்றார்களோஅந்தச் சமுதாய வடிவத்தை என்றைக்கும் விட்டுக் கொடுப்பதில்லை என்பதல்ல. அதற்குமாறாக, சாதித்த விளைவு பறிபோகாமலிருப்பதற்காகவும் நாகரிகத்தின் பலன்களை இழக்கமாலிருப்பதற்காகவும் அவர்களின் "commerce" க்குரிய வடிவமானது [விவகார உறவுகள்] பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளோடு மேற்கொண்டு பொருந்தி வராமற்போகிற தருணத்திலிருந்து அவர்கள் தங்களுடைய மரபுவழிச் சமுதாய வடிவங்களை மாற்றித்தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இங்கே "commerce" என்கிற சொல்லை அதன் மிக விரிவான பொருளிலே - ஜெர்மன் மொழியிலே நாம் "Verkehr" எனும் சொல்லைப் பயன்படுத்துவது போல -நான் பயன்படுத்துகிறேன். எடுத்துக்காட்டாக: சிறப்புரிமைகள், கில்டுகள், கார்ப்பரேஷன்கள் ஆகியவற்றின் அமைப்பு, மத்தியகால ஒழுங்குமுறைப்படுத்தும் ஆட்சிமுறை ஆகியவை சமுதாய உறவுகள், அவைமட்டுமே பெறப்பட்டிருந்த உற்பத்திச் சக்திகளுக்கும் முன்பிருந்து வந்த - இந்த அமைப்புகள் எழுவதற்குக் களமாயிருந்த - சமுதாய நிலைமைகளுக்கும் பொருத்தமாக இருந்தன. கார்ப்பரேஷன்கள், ஒழுங்குவிதிகளின் ஆட்சிமுறையின் பாதுகாப்பின்கீழ் மூலதனம் திரட்டப்பட்டது, கடல்கடந்த வாணிபம் வளர்க்கப்பட்டது, காலனிகள் நிறுவப்பட்டன. எந்த வடிவங்களில் பாதுகாப்பின் கீழ் இந்தப் பலன்கள் பழுத்தனவோ அந்த வடிவங்களை நீடித்து வைத்திருக்க முயன்றிருந்தால் மனிதர்கள் அதன் பலன்களை இழந்திருப்பார்கள். எனவே 1640லும் 1688லும் புரட்சிகள் எனும் இரு இடிமுழக்கங்கள் வெடித்தன. எல்லாப் பழைய பொருளாதார வடிவங்களும், அவற்்றிற்குப் பொருத்தமான சமுதாய உறவுகளும், பழைய குடியுரிமைச் சமுதாயத்தின் அதிகாரப் பற்றுள்ள வெளிப்படாகிய அரசியல் அமைப்பும், இங்கிலாந்திலே ஒழிக்கப்பட்டன. எனவே, எந்தப் பொருளாதார வடிவங்களில் மனிதர்கள் உற்பத்தி செய்தும், நுகர்ந்தும், பரிமாற்றம் செய்தும் வருகிறார்களோ அந்தப் பொருளாதார வடிவங்கள் தற்காலிகமானவை, வரலாற்று ரீதியானவை. புதிய உற்பத்திச் சக்திகள் கைவரப் பெற்றதும் மனிதர்கள் தமது உற்பத்திமுறையை மாற்றிக் கொள்கிறார்கள், மற்றும் உற்பத்திமுறையுடன் அந்தக் குறிப்பிட்ட உற்பத்தி முறைக்கு அவசியகரமான உறவுகளாக மட்டுமே இருக்கிற எல்லாப் பொருளாதார உறவுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.
இதைத்தான் திரு.புருதோன் புரிந்து கொள்ளவில்லை, மெய்ப்படுத்திக் காட்டுவதும் இல்லை. வரலாற்றின் உண்மையான இயக்கத்தைப் புரிந்து கொள்ளச் சக்தியற்ற திரு.புரூதோன் ஒரு மாய உருக்காட்சியை உண்டாக்கிறார், அது இயக்கவியல் வகைப்பட்டது என்றும் தன்மூப்பாகச் சொல்லிக் கொள்கிறது. பதினேழாவது, பதினெட்டாவது அல்லது பத்தொன்பதாவது நூற்றாண்டு பற்றிப் பேசவேண்டியது அவசியம் என்று அவர் உணரவில்லை, ஏனெனில் அவருடைய வரலாறு கற்பனையின் பனிமூட்ட மண்டலத்தில் உதித்துக் காலத்தையும் வெளியையும் கடந்து எழுகிறது. சுருங்கச் சொன்னால், அது வரலாறு அல்ல, பழைய ஹெகல்வாதக் குப்பை, அது புனிதம் கெட்ட வரலாறு - மனிதனைப் பற்றிய வரலாறு - அல்ல, புனிதமான வரலாறு - அதாவது கருத்துக்களின் வரலாறு - ஆகும். அவரது பார்வை நிலையிலே, கருத்து அல்லது நிரந்தரப் பகுத்தறிவுதன்னை வெளிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துகிற கருவியே மனிதன், வேறொன்றுமில்லை. திரு.புரூதோன் சொல்கிற பரிணாமங்கள் பரமநிலைக் கருத்தின் மாயக் கருக்குழியிலே நிறைவேற்றம் பெறும் பரிணாமங்கள்தான் ஆகும். இந்த மாயச் சொற்கட்டின் முகத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டால் மிஞ்சிக் கிடைப்பது திரு.புரூதோன் தமது மூளைக்குள்ளே பொருளாதார வகையினங்கள் எந்த ஒழுங்கிலே தம்மை முறைப்படுத்தி நிறுத்திக் கொள்கின்றனவோ அந்த வரிசையினை அவர் கொடுப்பதுதான். அது மிகவும் ஒழுங்கு குலைந்த மனத்திலே பிறந்த வரிசை என்று உங்களுக்கு நிரூபிப்பதில் எனக்குப் பெரிய முயற்சியொன்றும் தேவைப் படாது.
மதிப்பு எனும் விஷயம் திரு.புரூதோனின் செல்லக்குஞ்சு, அதைப் பற்்றிய ஆய்வுவிளக்கத்திலிருந்து அவர் தமது நூலைத் தொடங்குகிறார். இன்று இந்த ஆய்வுவிளக்கத்தைப் பரிசீலிப்பதிலே நான் இறங்கப் போவதில்லை.
நிரந்தரப் பகுதிதறிவின் பொருளாதாரப் பரிணாமங்களின் வரிசைத்தொடர் உழைப்புப் பிரிவினையிலிருந்து தொடங்குகிறது. திரு.புரூதோனுக்கு உழைப்புப் பிரிவினை ஒரு மிகச் சாதாரணமான விஷயம். எனினும் சாதி அமைப்பு முறையுங்கூட ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை அல்லவா? கைவினைச் சங்க அமைப்பு முறையும் மற்றொரு உழைப்புப் பிரிவினை தானே? இங்கிலாந்திலே பதினேழாம் நூற்றாண்டின் மத்தியிலே தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியிலே முடிந்த பட்டறைத் தொழில் அமைப்பு முறையின் கீழிருந்த உழைப்புப் பிரிவினையும் பெருமளவான நவீனகாலத் தொழில்துறையின் உழைப்புப் பிரிவினையிலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதல்லவா?
சாதாரணப் பொருளாதாரவாதிகளுங்ககூட எடுத்துக் கவனிக்கிறதைப் புறக்கணிக்கும்அளவுக்கு திரு.புரூதோன் உண்மையிலிருந்து விலகி நிற்கிறார். அவர் உழைப்புப் பிரிவினையைப் பற்றிப் பேசும் உலக மார்க்கெட்டைப் பற்றிக்குறிப்பிட வேண்டியது அவசியம் என்று உணரவில்லை. ஆனால், இன்னமும் காலனிகள் தோன்றியிராத, ஐரோப்பாவை பொருத்தமட்டில் இன்னும் அமெரிக்கா ஒன்று இராதிருந்த, கான்ஸ்டான்டினோபளின் இடையீடு மூலாமாக மட்டுமே ஐரோப்பா கிழக்காசியாவை அறிந்திருந்த பதினான்காவது, பதினைந்தாவது நுற்றாண்டுகளின் உழைப்புப் பிரிவினை எனப்பட்டது ஏற்கெனவே காலனிகள் வளர்ந்துவிட்டிருந்த பதினேழாவது நூற்றாண்டின் உழைப்புப் பிரிவினையிலிருந்து அடிப்படையாகவே வேறுபட்டிருக்க வேண்டுமல்லவா?
அத்துடன் முடியவில்லை. நாடுகளின் உள் அமைப்பு முழுவதும், அவற்றின் சர்வதேச உறவுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினையின் வெளிப்பாடு தவிர வேறு என்ன? உழைப்புப் பிரிவினை மாறுகிற பொழுது இவையும் மாறித் தீர வேண்டுமல்லவா?
திரு,புரூதோன் உழைப்புப் பிரிவினைப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதபடியால் நாட்டுப்புறமும் நகரப்புறமும் பிரிந்ததைப் பற்றி அவர் குறிப்பிடுவது கூட இல்லை. எடுத்துக் காட்டாக, இந்தப் பிரிவினை ஜெர்மனியில் ஒன்பதாம் நுற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்து. எனவே திரு. புரூதோனுக்கு இந்தப் பிரிவினை ஒரு நிரந்தர விதி, ஏனெனில் அதன் தோற்றமோ வளர்ச்சியோ அவருக்குத் தெரியாது. இந்த ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையின் படைப்பு நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்கிற முறையிலே தமது நூல் நெடுகிலும் அவர் பேசுகிறார். உழைப்புப் பிரிவினை பற்றி திரு.புரூதோன் சொல்வதெல்லாம் அவருக்கு முன்பே ஆதாம் ஸ்மித்தும் மற்றும் ஓராயிரம் பேர்களும் சொன்னதில் ஒரு சுருக்கமே - மிக மேம்போக்கான அரை குறையான சுருக்கமே - ஆகும்.
இயந்திரவகை என்பது இரண்டாவது பரிணாமம். உழைப்புப் பிரிவினைக்கும் இயந்திரவகைக்கும் உள்ள தொடர்பு திரு.புரூதோனுக்கு முற்றிலும் மாயமாகப்படுகிறது. ஒவ்வொரு வகைப்பட்ட உழைப்புப் பிரிவினையும் குறிப்பிட்ட உற்பத்திக் கருவிகளைப் பெற்றிருந்தது. எடுத்துக்காட்டாக, பதினேழாம் நூற்றாண்டின் நடுவுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவுக்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் ஒவ்வொன்றையும் கையால் செய்யவில்லை. இயந்திரங்கள் இருந்தன, நெசவு இயந்திரங்கள், கப்பல்கள், நெமபுக்கருவிகள் முதலான நுட்பச் சிக்கலான இயந்திரங்களும் இருந்தன.
எனவே, பொதுப்படையான உழைப்புப் பிரிவினையிலிருந்து இயந்திரவகையைப் பெறுவதை விட மிக அபத்தமானது வேறொன்றுமில்லை.
மேலும், திரு.புரூதோன் இயந்திரவகையின்தோற்றத்தைப் புரிந்து கொள்ளாதது போலவே அதன் வளர்ச்சியைப் புரிந்து கொண்டிருப்பது அதைவிடக் குறைவு என்று, போகிற போக்கிலே, சொல்லி வைக்கலாம். 1825ம் ஆண்டுவரை - முதலாவது பொது நெருக்கடிக் காலம் வரை உற்பத்தியைவிடப் பொதுவாகவே நுகர்வு சம்பந்தப்பட்ட தேவைகள் விரைவாக அதிகரித்தன, இயந்திர வகையின் வளர்ச்சி சந்தையின் தேவைகளிலிருந்து பிறந்து இன்றியமையாத ஒரு பின்விளைவேயாகும். 1825லிருந்து, இயந்திரங்களின் புனைவும் செயல்பாடும் வெறுமே தொழிலாளிகள் முதலாளிகள் இடையேயுள்ள போரின் விளைவாகவே இருந்தது. எனினும் இது இங்கிலாந்து விஷயத்தில் மட்டுமே உண்மை. ஐதோப்பிய நாடுகளை பொறுத்தவரை, உள்நாட்டுச் சந்தைகளிலும் உலகச் சந்தையிலும் ஒருங்கே ஆங்கிலேயப் போட்டி இருந்ததால் அவையும் இயந்திரவகையை எடுத்துப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியாக, வட அமெரிக்காவிலே இயந்திரவகை புகுத்தப்பட்டதற்குக் காரணம் மற்ற நாடுகளோடுள்ள போட்டி மட்டுமல்லாமல் ஆள்பலம் இல்லாமையுமாகும் - அதாவது, வட அமெரிக்காவின் மக்கட் தொகைக்கும் அதன் தொழில் தேவைகளுக்கும் இடையே பொருத்தமின்மை இருந்ததுமாகும். இந்த உண்மைகளிலிருந்து நீங்கள் கண்டு கொள்ள முடியும், திரு.புரூதோன் மூன்றாவது பரிணாமமாக, இயந்திரவகையின் எதிருரையாக, போட்டி எனும் பூதத்தை மந்திரித்து எழுப்பிவிடுவதில் என்ன அறிவு விவேகம் காட்டுகிறார் என்று!
இறுதியாகவும் பொதுவாகவும் சொன்னால், உழைப்புப் பிரிவினை, போட்டி, கட்ன் மதிப்பு முதலியவற்றின்பக்கத்தில் வைத்து இயந்திர வகையையும் ஒரு பொருளாதார வகையினமாக்குவது முற்றிலும் அபத்தமாகும்.
உழவு மாடு போலவே இயந்திரவகையும் ஒரு பொருளாதார வகையினம் அல்ல. தற்காலத்தில்இயந்திர வகையைப் பயன்படுத்துவது இன்றைய நமது பொருளாதார அமைப்பு முறையின் உறவுகளில் ஒன்று, ஆனால் இயந்திர வகையைப்பயன்படுத்தும் வழிமுறையானது இயந்திரவகையிலிருந்து முற்றிலும் தனித்ததாகும். காயப்படுத்துவதற்குப் பயன்படுத்தினாலும் சரி காயத்துக்கு மருந்திட்டுக் கட்டுப்போடுவதற்குப் பயன்படுத்தினாலும் சரி வெடிமருந்து வெடிமருந்துதான்.
போட்டி, ஏகபோகம், வரிகள் அல்லது போலீஸ், வாணிபக் கொடுப்பு நிலை, கடன் மதிப்பு, சொத்து ஆகியவற்றை நான் குறிப்பிட்டுள்ள வரிசையொழுங்கிலே திரு.புரூதோன் தமது மூளைக்குள் வளர அனுமதிக்கிறதிலே தம்மையே மிஞ்சிவிட்டார். இங்கிலாந்தில், இயந்திரவகை கண்டு பிடிக்கப்படுமுன்பே, பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கவாக்கில் அநேகமாக எல்லாக் கடன் மதிப்பு நிறுவனங்களும் வளர்க்கப்பட்டிருந்தன. வரிவிதிப்பை அதிக்கப்படுத்தி முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால் பிறந்த புதிய கோரிக்ககைகளை நிறைவாக்குவதற்கு வாய்த்த ஒரு புதிய வழிமுறையை பொதுக் கடன்மதிப்பு என்பது.
இறுதியாக, திரு.புரூதோனின் அமைப்பு முறையில் கடைசி வகையினமாக சொத்து அமைந்துள்ளது. ஆனால், யதார்த்த உலகத்திலே, உழைப்புப் பிரிவினையும் திரு.புரூதோனின் மற்ற எல்லா வகையினங்களும் சமுதாய உறவுகளாகும், அவற்றின் முழுமொத்தந்தான் இன்று சொத்து என்று அறியப்பட்டுள்ளது : இந்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் முதலாளித்துவச் சொத்து என்பது வெறுமே ஒரு இயக்கமுறுப்புவாத அல்லது சட்ட வல்லுநருக்குரிய பிரமையேயாகும். வேறான சகாப்தத்தைச் சேர்ந்த சொத்தான நிலப்பிர-பத்துவச் சொத்து மற்றிலும் வேறான சமுதாய உறவுகளின் வரிசைத் தொடரிலே வளர்கிறது. திரு.புரூதோன் சொத்தை ஒரு சுயேச்சையான உறவாக நிலைநாட்டப் போய் ஆய்வு முறையில் மட்டும் தவறு செய்யவில்லை: அதோடு முதலாளித்துவ உற்பத்தியின் எல்லா வடிவங்களையும் சேர்த்துப் பிணைத்திருக்கும் பந்தத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை, ஒரு குறிப்பிட்ட சகாப்தத்திலுள்ள உற்பத்தி வடிவங்களின் வரலாற்று ரீதியான, தற்காலிகமான தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெளிவாகக் காட்டிக் கொள்கிறார். நமது சமுதாய நிறுவனங்களை வரலாற்று ரீதியான உருவாக்கங்களாகக் கருதாமல் அவற்றின் தோற்றத்தையோ வளர்ச்சியையோ புரிந்து கொள்ளவும் முடியாமல், திரு.புரூதோன் அவற்றைப் பற்றி வறட்டுத் தத்துவ வகைப்பட்ட விமர்சனந்தான் அளிக்கமுடியும்.
எனவே, வளர்ச்சியை விளக்குவதற்குத் திரு.புரூதோன் ஒரு கட்டுக்கதையில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தமது உறுதியான கற்பனைக் கருத்தான் சம நிலைபற்றிய கருத்துக்கு வகை செய்வதற்காகத்தான் உழைப்புப் பிரிவினை, கடன் மதிப்பு, இயந்திரவகை முதலியவையனைத்தும் புனையப்பட்டதாக அவர் கருதுகிறார். இவையனைத்தும் சமநிலையின் நன்மைக்காகப் புனையப்பட்டவை, ஆனால் துரதிரஷ்டவசமாக அவை சமநிலைக்கு எதிராகத் திரும்பிவிட்டனவாம். இதுவே அவரது முழு வாதமாகும். அதாவது, அப்புறம் அசல் வளர்ச்சி ஒவ்வொரு படியிலும் அவரது கட்டுக்கதையுடன் முரண்படுகிற போது ஒரு முரண்பாடு இருக்கிறதாக முடிவுக்கு வருகிறார். தனது றெயிரக ஊன்றி விட்ட கருத்துக்கும் யதார்த்த இயக்கத்துக்கும் இடையே மட்டுமே இந்த முரண்பாடு உள்ளது என்கிற விஷயத்தை உங்களிடமிருந்து மறைக்கிறார்.
எனவே, மனிதர்கள் தமது உற்பத்திச் சக்திகளை வளர்த்து வருவதற்கேற்ப - அதாவது தாங்கள் வாழ்ந்து வருவதற்கேற்ப - அவர்கள் ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட உறவுகளை வளர்க்கிறார்கள் என்பதையும், உற்பத்திச் சக்திகளின் மாற்றத்தோடும் வளர்ச்சியோடும் கூடவே இந்த உறவுகளின் இயல்பும் மாறித் தீர வேண்டும் என்பதையும் திரு.புரூதோன் பார்க்கவில்லை, இதற்கு முக்கியமான காரணம் அவருக்கு வரலாற்று ரீதியான அறிவு கிடையாது. பொருளாதார வகையினங்கள் எனப்பட்டவை இந்த அசல் உறவுகளின் சூட்சுமச் சொல்லுக்கள் மட்டுந்தான், இவ்வுறவுகள் இருக்கிளவரைதான் அவை உண்மையாய் நீடிக்கின்றன என்பதை அவர் பார்க்கவில்லை. எனவே, அவர் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் செய்கிற தவற்றில் விழுகிறார் - அவர்கள் இந்தப் பொருளாதார வகையினங்கள் நிரந்தரமானவை என்று கருதுகிறார்கள், அவற்றை வரலாற்று வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மட்டுமே - உற்பத்திச் சக்திகளின் ஒரு திட்டவட்டமான வளர்ச்சிக் கட்டத்துக்கு மட்டுமே - விதிகளாக இருக்கிற வரலாற்று ரீதியான விதிகளாகக் கருதவில்லை. எனவே, யதார்த்தமான, தற்காலிகமான, வரலாற்று வழிப்பட்ட சமுதாய உறவுகளின் சூட்சுமச் சொல்லுக்களாக அரசியல் பொருளாதார வகையினங்களைக் கருதுவதற்கு மாறாக, திரு.புரூதோன் ஒரு மாயமான தலைகீழ் வித்தையின் மூலமாக இந்த யதார்த்தமான உறவுகளிலே இந்தச் சூட்சுமக் கருத்துக்களின் வெறும் உருத்தோற்றங்களைத்தான் காண்கிறார். இந்தச் சூட்சுமக் கருத்துக்கள் எனப்பட்டவை உலகந் தோன்றிய நாளிலிருந்து தெய்வப் பிதாவின் நெஞ்சிலே சூத்திரங்களாகத் துஞ்சியவாறிருந்தனவாம்.
ஆனால் இங்கே திரு.புரூதோனின் அறிவாற்றல் கடுமையான வலிப்புக்கு ஆளாகிறது. இந்தப் பொருளாதார வகையினங்கள்அனைத்தும் இறைவனின் நெஞ்சிலிருந்து உதிக்கும் வெளிப்பாடுகளானால், மனிதனின் மறைவான, நிரந்தரமான வாழ்க்கையானால், முதலாவதாக: வளர்ச்சி எனப்படும் நிகழ்வு எப்படி ஏற்படுகிறது, இரண்டாவதாக : எப்படி திரு.புரூதோன் நடப்புக்காப்புவாதிகயாக இல்லாமல் இருக்கிறார்? பகைமைகளின் ஒரு முழுமையான அமைப்பு முறையைக் கொண்டு அவர் இந்த வெளிப்படையான முரண்பாடுகளை விளக்குகிறார்.
இந்தப் பகைமைகளின் அமைப்பு முறையைத் தெளிவு படுத்திக் காட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு தருவோம்.
ஏகபோகம் ஒரு நல்ல விஷயம், ஏனெனில் அது ஒரு பொருளாதார வகையினம், எனவே அது இறைவனின் வெளிப்பாடு. போட்டி ஒரு நல்ல விஷயம், ஏனெனில் அதுவும் ஒரு பொருளாதார வகையினம். ஆனால் எது நல்லதில்லை என்றால் ஏகபோகத்தின் யதார்த்த நிலையும் போட்டியின் யதார்த்த நிலையுமாகும். அதைவிட மோசமானது போட்டியும் ஏகபோகமும் ஒன்றையொன்று விழுங்கும் விஷயம். என்ன செய்வது? ஆண்டவனின் இவ்விரு கருத்துக்களும் ஒன்றோடொன்று முரண்படுவதால், இவ்விரண்டுக்கும் உரிய ஒரு கூட்டமைப்புங்கூட ஆண்டவனின் நெஞ்சிலே இருப்பது வெளிப்படை என்று அவருக்குத் தோன்றுகிறது, இந்தக் கூட்டமைப்பிலே ஏகபோக்ததின் தீமைகளைப் போட்டி நிவர்த்திக்கிறதாம், போட்டியின் தீமைகளை ஏகபோகம் நிவர்த்திக்கிறதாம். இரண்டு கருத்துக்களிடையே நடக்கும் போராட்டத்தின் விளைவாக அவற்றின் நல்ல அம்சம் மட்டுமே புலப்படுத்திக் கொள்கிறதாம். இந்த இரகசியத்தை இறைவனிடமிருந்து பிடுங்கி எடுத்துக் கொண்டு பயன்படுத்தினால் போதும் எல்லாம் சிறப்பாக ஈடேறும், மனிதனின் அகநிலையற்ற பகுத்தறிவின் இருட்டிலே மறைந்து கிடக்கும் கூட்டமைப்பான சூத்திரத்தை வெளிப்படுத்தித் தீரவேண்டும். அதை வெளிப்படுத்துவோனாக முன்வருவதற்கு ஒரு கணமேனும் தயங்கவில்லை திரு.புரூதோன்.
ஆனால், யதார்த்த வாழ்க்கையை ஒரு வினாடி நோக்குங்கள். தற்காலப் பொருளாதார வாழ்க்கையிலே நீங்கள் போட்டியையும் ஏகபோகத்தையும் காண்கிறதோடல்லாமல் அவற்றின் கூட்டமைப்பையும் காண்கிறதோடல்லமல அவற்றின்கூட்டமைப்பையும் காண்கீறிர்கள், அது ஒரு சூத்திரம் அல்ல, அது ஒரு இயக்கம். ஏகபோகத்தை உண்டாக்குகிறது. ஆனால் இந்த சமன்பாடு இன்றைய நிலைமையின் கஷ்டங்களைப் போக்குவதற்குப் பதிலாக - போக்குகிறது என்று தான் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் நினைக்கிறார்கள் - அதைவிட மேலும் கஷ்டமான குழப்பமான நிலையைச் சென்றடைகிறது. எனவே, தற்காலப் பொருளாதார உறவுகள் நிலைகொண்டிருப்பதற்கான அடிப்படையை நீங்கள் மாற்றினால், இன்றைய உற்பத்தி முறையை நீங்கள் ஒழித்தால், நீங்கள் போட்டியையும் ஏகபோகத்தையும் அவற்றின் பகைமையும் ஒழிப்பதோடல்லாமல் அவற்றின் ஒற்றுமையை, அவற்றின் கூட்டமைப்பை, போட்டிக்கும் ஏகபோகத்துக்கும் உண்மையான நடுவமைதி நிலையான இயக்கத்தைக் கூட ஒழித்துவிடுவீர்கள்.
இனி திரு.புரூதோனின் இயக்கவியலுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருவோம்.
விடுதலையும் அடிமை முறையும் ஒரு பகைமையாகும். விடுதலையின் நிறைகளையும் குறைகளையும் பற்றி நான் பேசத் தேவையில்லை, அடிமை முறை பற்றிப் பேசுகையில் அதன் குறைகளைப் பற்றியும் பேசத் தேவையில்லை. அதன் நிறைகளை விளக்குவது ஒன்றே இங்குள்ள விஷயம். நாம் மறைமுகமான அடிமை முறையை, பாட்டாளி வர்க்கத்தின் அடிமை நிலைமை, இங்கே எடுத்துப் பேசவில்லை, நேரடியான அடிமை முறையை, ஸீரினாம், பிரேசில், வட அமெரிக்காவின் தென்மாநிலங்கள் ஆகியவற்றிலுள்ள கறுப்பு இனத்தவர்களின் அடிமை நிலையை எடுத்துப் பேசுகிறோம்.
இயந்திரவகை, கடன் மதிப்பு முதலியவற்றைப்போல் நேரடியான அடிமை முறையும் இன்று நமது தொழில் முறைக்கு அச்சாணியாகும். அடிமை முறை இன்றேல் பகுத்தி இல்லை, பருத்தி இல்லையேல் நவீனத் தொழில் துறை இல்லை. அடிமை முறை காலனிகளை மதிப்புள்ளவையாகச் செய்கிறது, காலனிகள் மதிப்புள்ளவையாகச் செய்கிறது, காலனிகள் உலக வாணிபத்தைப் படைத்துள்ளன, உலக வாணிபம் பெருமளவான இயந்திரத்தொழில் துறைக்கு அவசியமான நிபந்தனையாகும். எனவேதான், நீக்கிரோக்களை வாங்கி விற்பது தொடங்குமுன், காலனிகள் பழைய உலகத்துக்கு ஒரு சில விளைபொருட்களைத்தான் வினியோகித்தன, உலகத் தோற்றத்தில் காணத்தக்க மாற்றம் எதுவும் செய்யவில்லை. எனவே அடிமை முறை ஒரு மிக முக்கியமான பொருளாதார வகையினமாகும். மிக முற்போக்கான நாடாகிய வட அமெரிக்கா அடிமை முறை இல்லாவிட்டால் ஒரு தந்தை வழி ஆட்சிக்கால நாடாக மாறிவிடும். நாடுகளின் நிலப்படத்திலிருந்து வட அமெரிக்காவை நீக்கிவிட்டால் அராஜகமும் உலக வாணிப நலிவும் நவீன நாகரிகத்தின் நலிவும் கிடைக்கம். ஆனால் அடிமை முறையை மறைய விடுவது அமெரிக்காவை நாடுகளின் நிலப்படத்லிருந்து நீக்குவதாகும். எனவே, அடிமை முறை ஒரு பொருளாதார வகையினமாக இருப்பதால் அது உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒவ்வொரு நாட்டிலும் காணக் கிடக்கிறது. நவீன காலத்திய நாடுகள் அடிமை முறையைத் தத்தம் நாடுகளில் வெறுமே மறைத்து வைக்கத்தான் தெரிந்து வைத்துள்ளன, ஆனால் புதிய உலகத்தில் [அமெரிக்க கண்டத்தில்] அதை வெளிப்படையாக நிலை நாட்டச் செய்துள்ளன. அடிமை முறையைப் பற்றிய இந்த ஆய்வுக் கூற்றுகளுக்குப்பின் மதிப்புக்குரிய நமது திரு.புரூதோன் என்ன செய்வார்? விடுதலைக்கம் அடிமை முறைக்கும் இடையே ஒரு கூட்டமைப்பைத் தேடுவார், அடிமை முறைக்கும் விடுதலைக்கும் இடையே நடுவமைதி நிலையை, சமன நிலையைத் தேடுவார்.
திரு.புரூதோன் மனிதர்கள் பருத்தித் துணி, நார்வகைத் துணி, பட்டு வகையறாக்களை உற்பத்தி செய்கிறார்கள் என்கிற விஷயத்தை மிக நன்றாகப் புரிந்து கொணடிருக்கிறார், இந்தச் சின்ன அளவிலே அவர் புரிந்து கொண்டிருப்பதே அவருக்குப் பெரும் பெருமைதான்! அவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, இந்த மனிதர்கள் உற்பத்திச் சக்திகளுக்குத் தக்கபடி சமுதாய உறவுகளையும் உற்பத்தி செய்கிறார்கள், அவற்றின் சூழலிலேதான் பருத்தித் துணியையும் நார்வகைத் துணியையும் தயாரிக்கிறார்கள் என்கிற விஷயத்தைத்தான். தமது பொருள் உற்பத்திக்குத் தக்கபடி தமது சமுதாய உறவுகளை உற்பத்தி செய்து கொள்கிற மனிதர்கள் கருத்துக்களையும் வகையினங்களையும் - அதாவது, இதே சமுதாய உறவுகளின்சூட்சுமமான இலட்சியச் சொல்லுருக்களை - கூடத்தான் உற்பத்தி செய்கிறார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. எனவேதான், இந்த வகையினங்கள் அவை குறிக்கிற உறவுகளைப் போலவே நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்று ரீதியான, தற்காலிகமான விளைபயன்களே. அதற்குமாறாக திரு.புரூதோனை பொருத்தவரை சூட்சுமக் கருத்துக்களும் வகையினங்களுமே ஆதிமூல காரணம் ஆகும். அவர் கருத்துப்படி இவைதான வரலாற்றைப் படைக்கின்றன, மனிதர்களல்ல. சூட்சுமக் கருத்து, தன்னிலையிலே எடுத்துக் கொள்ளப்பட்ட வகையினம் - அதாவது, மனிதர்களுக்கும் அவர்களுடைய பொருள் வகைப்பட்ட நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்டநிலையிலே - இறவாதது, மாற்றவொண்ணாதது, இயங்காதது என்பது உண்மை, அது சுத்தமான பகுத்தறிவுப் பிறவியின் ஒரு வடிவம் மட்டுமேமாகும், அதாவது சூட்சுமக் கருத்து எனப்பட்டதே சூட்சமமானது என்று சொல்வதாகும். மெச்சத்தக்க ஒரு மிகைச்சொல்லடுக்கு அல்லவா!
எனவேதான், வகையினங்கள் என்கிற விதத்தில் பொருளாதார உறவுகள் எனப்பட்டவை திரு.புரூதோனுக்குத் தோற்றமோ முன்னேற்றமோ இல்லாத நிரந்தரமான சூத்திரங்கள்.
இதை மற்றொரு விதமாகச் சொல்வோம், தம் கருத்தில் முதலாளித்துவ வாழ்க்கை முறை ஒரு நிரந்தரமான உண்மைப் பொருள் என்று திரு.புரூதோன் நேரடியாகச் சொல்லவில்லை, கருjதுக்கள் என்கிற வடிவத்திலே முதலாளித்துவ உறவுகளைக் குறிக்கும் வகையினங்களுக்குத் தெய்வாம்சம் அளிப்பதின் மூலமாக அவர் அதை மறைமுகமாகச் சொல்கிறார். முதலாளித்துவச் சமுதாயத்தின் விளைபயன்களை அவர் தன்னியல்பாக உதித்த நிரந்தரப் பிறவிகளாகக் கருதுகிறார், அவை வகையினங்கள் என்கிற வடிவில், கருத்து வடிவில் அவரது மனத்தில் தம்மைப் புலப்படுத்திக் கொண்டவுடனே சொந்தத்தில் உயிர் பெற்றவையாக ஆகிவிடுகின்றன. எனவே அவர் முதலாளித்துவ முறையின் அடிவானத்துக்கு மேலே எழுவதில்லை. அவர் நிரந்தர உண்மை என்று முன்னனுமானித்துக் கொண்டவையான முதலாளித்துவக் கருத்துக்களை வைத்துக் கொண்டு வேலை செய்தால் இந்தக் கருத்துக்களுக்குரிய ஒரு கூட்டமைப்பை, நடுவதைதி நிலையைத் தேடிச் செல்கிறார், அவை நடுவமைதி நிலையை எட்டுவதற்கான இன்றைய வழிமுறைதான் ஒரே சாத்தியமான வழிமுறை என்று பார்க்கவில்லை.
உண்மையிலே, எல்லா நல்ல முதலாளிகளும் செய்கிறதையே அவரும் செய்கிறார். கோட்பாடு ரீதியிலே - அதாவது, சூட்சுமக் கருத்துக்கள் என்று கருதப்பட்ட நிலையில் - போட்டி, ஏகபோகம் முதலானவைதான் வாழ்க்கைக்குரிய ஒரே அடிப்படை, ஆனால் நடைமுறையிலே அவை அவ்வளவு திருப்திகரமாயில்லை என்று அவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரும் போட்டியின் சாகடிக்கும் விளைவுகளை விலக்கிய போட்டி வேண்டும் என்கிறார்கள். சாத்தியமற்றதை - அதாவது, முதலாளித்துவ வாழ்க்கைக் குரிய நிலைமைகள் வேண்டும், ஆனால் அந்த நிலைமைகளின் அவசியகரமான பின்விளைவுகள் மட்டும் இருக்கக் கூடாது - அவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி வடிவமும் நிலப்பிரபத்துவ வடிவம் போலவே வரலாற்று ரீதியானது, தற்காலிகமானது என்று அவர்களில் ஒருவர் கூடப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கருத்தில் முதலாளிதுவ வகைப்பட்ட மனிதன்தான் ஒவ்வொரு சமுதாயத்துக்கம் சாத்தியமான அடிப்படையாவான் எனும் விஷயத்திலிருந்து இந்தத் தவறு ஏற்படுகிறது, முதலாளித்துவத் தன்மை அற்றுவிட்ட மனிதர்களைக் கொண்ட சமுதாயத்தை அவர்களால் கற்பனை செய்ய முடியாது.
எனவே, திரு,புரூதோன் வறட்டுத் தத்துவவாதியாக இருந்து தீர வேண்டியுள்ளது. அவர் கருத்தில், தற்கால உலகத்தைத் தலைகீழாகப் புரட்டி வருகிற வரலாற்று இயக்கமானது. இரண்டு முதலாளித்துவக் கருத்துக்களுக்குரிய சரியான நடுவமைதி நிலையை, கூட்டமைப்பைக் கண்டு பிடிக்கும் பிரச்சினையாகத் தாழ்ந்துவிடுகிறது. எனவே, இந்தக் கெட்டிக்கார ஆசாமி தமது தந்திரத்தால் கடவுளின் இரகசிய எண்ணத்தை, இரண்டு தனித்தகருத்துக்களின் ஒற்றுமையை, கண்டுபிடிக்க முடிகிறது - இவ்விரு கதுத்துக்கள் தனித்திருப்பதற்குக் காரணம் திரு.புரூதோன் அவற்றை நடைமுறை வாழ்க்கையிலிருந்து, தற்கால உற்பத்தியிலிருந்து, அதாவது, அவை வெளியிடும் யதார்த்தங்களின் ஒற்றுமையிலிருந்து தனிமைப் படுத்தியிருக்கிறார். ஏற்கெனவே மனிதர்கள் பெற்றுள்ள உற்பத்திச் சக்திகளுக்கும் அந்த உற்பத்திச் சக்திகளோடு மேற்கொண்டு பொருந்தி வராதிருக்கும் அவர்களின் சமுதாய உறவுகளுக்கும் இடையேயுள்ள மோதல்களிலிருந்து உதிக்கும் மகத்தான வரலாற்று இயக்கத்துக்குப் பதிலா, ஒவ்வொரு நாட்டுக்குள்ளே இடையேயும் தயாரிக்கப்பட்டு வரும் பயங்கரமான போர்களுக்குப் பதிலாக, இந்தப் மோதல்களுக்குத் தீர்வுகாண முடிவதற்கு ஒரே சாதனமாயிருக்கக்கூடிய மக்களின் நடைமுறை வகைப்பட்ட வன்முறைச் செய்கைக்குப் பதிலாக - இந்த மாபெரும், நீடித்த, சிக்கலான இயக்கத்துக்குப் பதிலாக, திரு.புரூதோன் தமது தலையில் நடந்து வரும் விசித்திரர்ன இயக்கத்தைக் கொடுக்கிறார். எனவே படித்த அறிவாளிகள் தாம், கடவுளின் இரகசிய எண்ணங்களைக் களவாடத் தெரிந்துள்ள மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அவர்களின் தரிசனங்களைச் செயல் படுத்துவது ஒன்றுதான் சாதாரண மக்களின் வேலை.
திரு.புரூதோன் இருப்பதின் அரசியல் இயக்கத்துக்கும் கடும் எதிரியாக இருப்பதின் காரணத்தை இப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அவர் கருத்துப்படி, தற்காலப் பரிச்சினைகளுக்குரிய தீர்வு மக்களின் இயக்கத்திலே இல்லை, தமது சொந்த மனத்தின் இயக்கவியல் சுழற்சியிலேதான உண்டாம். அவர் கருத்தில் வகையினங்கள் உந்துசக்தியாக இருப்பதால், அந்த வகையினங்களை மாற்றுவதற்கு நடைமுறை வாழ்க்கையை மாற்ற வேணடிய அவசியமில்லை. விஷயம் அதற்கு நேர் மாறானதாம். வகையினங்களை மாற்றித் தீர வேண்டும், அதன் பின்விளைவாக இன்றையச் சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும்.
முரண்பாடுகளைச் சமரசப்படுத்த அவருக்கிருக்கும் விருப்பத்திலே திரு.புரூதோன்அந்த முரண்பாடுகளின் அடிப்படையையே மாற்றித் தீர வேண்டாமாஎன்று கூடக் கேட்கவில்லை. அரசனையும் பிரதிநிதிகளின் சட்டமன்றத்தையும் பிரபுக்களின் சட்டமன்றத்தையும் சமுதாய வாழ்க்கையின் ஒன்றிணைந்த பகுதிகளாக, நிலையான வகையினங்களாக வைத்திருக்க விரும்புகிற அரசியல் வறட்டுத் தத்துவவாதி போலவே அவர் இருக்கிறார். அவர் தேடிக் கொண்டிருப்பதெல்லாம் இந்தச் சக்திகளிடையே ஒரு நடுவமைதி நிலையை நிலை நாட்டுவதற்குரிய ஒரு புதிய சூத்திரந்தான் - அவற்றின் நடுவமைதி நிலை என்னவோ ஒரு சக்தி மற்ற சக்தியிடம் ஒரு சமயம்வென்றும் ஒரு சமயம் அடிமைப்பட்டும் வருகிறபடியுள்ள அசல் இயக்கத்திலேதான அடங்கியுள்ளது. இப்படித்தான், சமுதாயப்ப படிப்பிரிவினரையும், பிரபுத்துவத்தையும், அரசனையும், நாடாளுமன்றத்தையும் பிறவற்றையும் நடுவமைதி நிலைக்குக் கொணரக்கூடிய உண்மையான சூத்திரத்தைத் தேடுவதில் பல சாமானியத் திறமுள்ள சிந்தனையாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் மும்முரமான ஈடுபட்டிருந்தனர், அவர்கள் ஒரு நாள் விழித்தெழுந்த போது மேற்கொண்டு உண்மையிலே அரசனோ நாடாளுமன்றமோ பிரபுத்துவமோ எதுவும் இல்லாதிருக்கக் கண்டார்கள். இந்த நிலப்பிரபுத்துவ முறையின் ஏற்பாடுகளுக்கும் பகைமைகளுக்கும் அடிப்படையாக இருந்து வந்த எல்லாச் சமுதாய உறவுகளையும் தூக்கியெறிவதே இந்தப் பகைமையின் உண்மையான நடுவமைதி நிலையாகும்.
திரு.புரூதோன் ஒரு புறத்தில் நிலையான கருத்துக்களையும் சுத்தமான பகத்தறிவின் வகையினங்களையும் மற்றொரு புறத்தில் அவர் கருத்துப்படி இந்த வகையினங்களின் செயல் பாடாக உள்ள மனிதப் பிறவிகளையும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையையும் வைக்கிற காரணத்தால், வாழ்க்கைக்கும் கருத்துக்களுக்கும் இடையே - ஆன்மாவுக்கும் உடம்புக்கும் இடையே உள்ள ஒரு இருமைவாதம், பல வடிவங்களில் திரும்பத் திரும்ப நிகழ்ந்து வரும் ஒரு இருமைவாதம், அவரிடம் தொடக்கத்திலிருந்தே இருக்கக் காண்கிறோம். இந்தப் பகைமை என்பது திரு.புரூதோன் தெய்வமாகப் போற்றிக் கொள்ளும் வகையினங்களின் சாதாரணமான தோற்றத்தையும் சாதாரணமான வரலாற்றையும் புரிந்து கொள்ள இயலாத திறமின்மையே தவிர வேறில்லை.
கம்யூனிசத்துக்கு எதிராகத் திரு.புரூதோன் மேற்ெரள்ளும் அபத்தமான தாக்குகளைப் பற்றிப் பேசுவதற்கு இடமில்லை, ஏற்கெனவே என் கடிதம் மிகவும் நீண்டுவிட்டது. இப்போதைக்கு நீங்கள் என்னோடு ஒத்துப் போவீர்கள், இன்றையச் சமுதாய நிலைமைப் புரிந்து கொள்ளாத ஒருவன் அதைத் தூக்கியெறியும் போக்கில் போகிற இயக்கத்தையும் சரி, இந்தப் புரட்சிகரமான இயக்கத்தின் இலக்கிய வெளியீடுகளையும் சரி அதைவிடக் குறைவாகத்தான் புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கலாம்.
உணர்ச்சி வகைப்பட்ட சோஷலிசட் பாணி பகற்கனவுகளைத் திரு.புரூதோன் வெறுக்கிறாரே, அந்த ஒரேயொரு அம்சத்தில் அவருடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு. அவருக்கு முன்பே, நான் இந்த உணர்ச்சி வகைப்பட்ட, கற்பனாவாத, மூளையற்ற சோஷலிசத்தைக் கேலி செய்ததின் வழியாக ஏற்கெனவே நிறைய பகைமையை என்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் திரு.புரூதோன் தமது குட்டிமுதலாளித்துவ உணர்ச்சிப் பாங்கை - வீடு, இல்லறக் காதல், இன்னும் இவை போன்ற சாதாரண விவகாரங்களைப் பற்றி அவர்க உணர்ச்சி பொங்கப் பேசுவதையே நான் குறிப்பிடுகிறேன் - சோஷலிஸ்ட் உணர்ச்சிப் பாங்குக்கு எதிராக நிறுத்துகிறதில் தம்மைத் தாமே வேடிக்கையாக ஏமாற்றிக் கொள்ளவில்லையா? பார்க்கப் போனால், மதிப்புக்குரிய புரூதோனின் படாடோபமான வெற்றுரைகளை விட ஃபூரியேயின் [எடுத்துக்காட்டுக்குக் குறிப்பிடுகிறேன்] சோஷலிஸ்ட் உணர்ச்சிப் பாங்கு மிக ஆழமாகச் செல்கிறது. அவரே தமது வாதத்தின் வெறுமையையும் இவ்விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் தமக்குத் திறமை அவறே இல்லாதிருப்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறார், எனவேதான் அவரிடம் கோபமும் சொல்லார வாரமும் தர்மாவேசமும் வெடிக்கின்றன, நுரைதள்ளப் பேசுகிறார், சபிக்கிறார், கண்டிக்கிறார், வெட்கக்கேடு படுகொலை என்று மனிதன் இறைவன் எல்லோரிடமும் பீற்றிக் கொள்கிறார்! சோஷலிஸ்ட் உணர்ச்சிப் பாங்குகளையோ அவைதான் என்று தாம் கருதுவதையோ அவர் விமர்சிக்கவில்லை. ஒரு துறவி போல, ஒரு போப்பாண்டவர் போல, கேவலமான பாவிகளைச் சபித்து விலக்கி வைக்கிறார், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் மேன்மைகளையும் இல்லற வாழ்க்கையின் அற்பமான தந்தைவழி ஆட்சிக் காலப் பிரமைகளின், களவொழுக்கப் பிரமைகளின் மேன்மைகளையும் வியந்து பாடுகிறார். இது தற்செயலானதல்ல. அடிமுதல் முடிவரை திரு.புரூதோன் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் மெய்யறிஞரும் பொருளாதாரவாதியும் ஆவார். முன்னேறிய ஒரு சமுதாயத்தில் குட்டிமுதலாளித்துவ நபர் தனது வாழ்நிலையின் காரணத்தாலேயே ஒரு புறத்தில் சோஷலிஸ்டாகவும் மறுபுறத்தில் பொருளாதாரவாதியாகவும் இருந்து தீரவேண்டியிருக்கிறது, அதாவது, அவன் பெரு முதலாளிகளுடைய செல்வச் சிறப்பைக் கண்டு பிரமையடித்து நிற்கிறான், மக்களின் துன்பதுயரங்களைக் கண்டு அனுதாபப்படுகிறான். ஒரே நேரத்தில் அவன் முதலாளித்துவ வகைப்பட்டவனாகவும் மக்களைச் சார்ந்துள்ள மனிதனாகவும் இருக்கிறான். தான் நடுநிலை வகிப்பதாகவும் சரியான நடுவமைதி நிலையை [அது சாமானியத் திறத்தினின்று வேறுபட்ட ஒன்றாகச் சொல்லிச் கொள்கிறது] கண்டு கொண்டதாகவும் அடிநெஞ்சிலே தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான். இவ்வகைப்பட்ட குட்டிமுதலாளித்துவ முரண்பாட்டை வியந்தேத்துகிறான், ஏனெனில் முரண்பாடுதான் அவனது வாழ்நிலைக்கு அடிப்படை. அவனே செயல்பட்டு வரும் சமுதாய முரண்பாடு தவிர வேறில்லை. நடைமுறையில் தான் எப்படி இருக்கிறானோ அதை அவன் தத்துவரீதியிலே நியாயப்படுத்தித் தீர வேண்டும், மற்றும் பிரெஞ்சு குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் விஞ்ஞான ரீதியான வியாக்கியான கர்த்தாவாக இருக்கும் சிறப்பு திரு.புரூதோனுக்கு உண்டு - அது ஒரு உண்மையான சிறப்பாகும், எனெனில் வரவிருக்கும் எல்லாச் சமுதாயப் புரட்சிகளிலும் குட்டிமுதலாளித்துவ வர்க்கம் ஒன்றிணைந்த ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.
அரசியல் பொருளாதாரம் பற்றிய எனது நூலை இக்கடிதத்துடன் அனுப்ப வேண்டும் என்பதே என்விருப்பம், என்றாலும் இந்நூலையும் சரி, ஜெர்மன் மெய்யறிஞர்கள், சோஷலிஸ்டுகள் பற்றிய விமர்சனத்தைப் பற்றி உங்களிடம் பிரஸ்ஸல்சில் பேசியிருக்கிறேனே, அதையும் சரி, இதுவரை அச்சடித்து வெளியிடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ஜெர்மனியில் இப்படிப்பட்ட ஒரு வெளியீட்டுக்கு எதிர்ப்படுகிற கஷ்டங்களைச் சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள் - ஒரு புறத்தில் போலீஸார் உண்டாக்கும் கஷ்டங்கள், மறுபுறத்தில் நான் தாக்கும் போக்குகளுக்கெல்லாம் தாங்களே அக்கறையுள்ள பிரதிநிதிகளாக இருக்கும் புத்தகவிற்பனையாளர்கள் உண்டாக்கும் கஷ்டங்கள். நமது சொந்தக் கட்சியைப் பொருத்தவரை, அது ஏழையாயிருப்பது மட்டுமல்ல, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பெரும் பகுதியினர் நான் அவர்களுடைய கற்பனையுலகத் திட்டங்களையும் சொல்லெழுச்சிகளையும் எதிர்ப்பதற்காக என் மேல் கோபம் கொண்டிருக்கிறார்கள்....
அன்புடன்,
கார்ல் மார்க்ஸ்

No comments:
Post a Comment