Saturday, February 6, 2010

3. கம்யூனிஸ்டுக் கட்சி - தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை

சோஷலிசப் புரட்சி பற்றி

மார்க்ஸ் - எங்கெல்ஸ் - லெனின்

3. கம்யூனிஸ்டுக் கட்சி - தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை

"கம்யூனிஸ்டுக் கட்சியின் அறிக்கை"
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ் - பி.எங்எகல்ஸ்

...மற்ற கட்சிகளிலிருந்து கம்யூனிஸ்டுகள் வேறு பட்டிருப்பது இதைக் கொண்டுதான்: 1.வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளிகளிகளின் தேசியப் போராட்டங்களில் எல்லா தேசிய இனத்திற்கும் அப்பால் சுதந்திரமாக நின்று தொழிலாளி வர்க்கம் முழுவதின் பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னுக்கக் கொணர்ந்து நிறுத்து கின்றனர். 2. முதலாளி வர்க்கத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் முழுவதின் நலன்களைப் பிரதி நிதித்துவப் படுத்துகிறார்கள்.

எனவே ஒரு புறத்தில், கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கக் கட்சிகளின் மிகவும் முன்னேறிய, மனவுறுதி படைத்த பகுதியாக இருக்கின்றனர், மற்றெல்லாப் பகுதிகளையும் முன்தள்ளிச் செல்கிற பகுதியாக இருக்கின்றனர், மறுபுறத்தில், தத்துவரீதியிலே, தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் திரளை விட பாட்டாளி வர்க்க இயக்கத்தின் நடைபயில வேண்டிய வழியின் திசையையும் நிலைமைகளையும் இறுதியான பொது விளைவுகளையும் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.

மற்றெல்லாத் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் போலவே கம்யூனிஸ்டுகளின் உடனடிக் குறிக்கோளும் அதேதான், தொழிலாளி வர்க்கத்தை ஒரு வர்க்கமாக உருவாக்குவது, முதலாளி வர்க்க மேலாதிக்கத்தைத் தூக்கியெறிவது, தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வது....

.....வர்க்கப் பகைமைகள் மீதும் பலரைச் சிலர் சுரண்டுவதின் மீதும் ஆதாரப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களின் உற்பத்திக்கும் உடைமையாக்கிக் கொள்வதற்குமான அமைப்பு முறையின் இறுதியான, மிகவும் முழுமையான வெளியீடுதான் முதலாளித்துவ பூர்ஷுவா தனிச்சொத்துடைமையாகும்.

இந்த அர்த்தத்தில், தனிச்சொத்துடைமையை ஒழிப்பது என்கிற ஒரே வாக்கியத்தில் கம்யூனிஸ்டுகளின் தத்துவத்தை சுருக்கித் தொகுத்துச் சொல்லி விடலாம்.

.....தொழிலாளி வர்க்கத்தின் உடனடி குறிக்கோள்களைச் சாதிப்பதற்காக, தற்காலிக நலள்களை நடைமுறையில் அமல் படுத்துவதற்காக கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள்: ஆனால் நிகழ்காலத்திய இயக்கத்தில் அவர்கள் அந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள், கவனித்துக் கொள்கிறார்கள்....

....நடப்பிலுள்ள சமுதாய, அரசியல் அமைப்புக்கு எதிரான ஒவ்வொரு புரட்சிகரமான இயக்கத்தையும் கம்யூனிஸ்டுகள் எங்கும் ஆதரிக்கிறார்கள்.

இந்த இயக்கங்கள் அமைத்திலும் சொத்துப் பிரச்சினையை - அது அந்தந்தக் காலத்தில் எந்த வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த போதிலும் சரி - ஒவ்வொன்றிலும் தலையாய பிரச்சினையாக முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர்.

கடைசியாக, எல்லா நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் உடன்பாட்டிற்காகவும் அவர்கள் பாடுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் இலட்சியங்களையும் மறைப்பதை ஏளனத்துடன் நிராகரிக்கின்றனர். இன்று நடப்பிலுள்ள எல்லாச் சமுதாய நிலைமைகளையும் பல வந்தமாகத் தூக்கியெறிவதின் மூலமாக மட்டுமே தங்களுடைய குறிக்கோள்களைச் சாதிக்க முடியும் என்று பகிரங்கமாக ஆறிவிக்கிறார்கள். கம்யூனிஸ்டுப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் நடுங்கட்டும். இழப்பதற்குத் தங்கள் விலங்குகளைத் தவிர வேறொன்றும் தொழிலாளிகளிடம் இல்லை. அவர்கள் வென்று கொள்வதற்கு ஓர் உலகம் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!

1847 டிசம்பர் - 1848 ஜனவரி



--------------------------------------------------------------------------------

"சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் துவக்கவுரை"
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ்

[லண்டன், லாங் ஏகர், செயின்ட் மார்டின் மண்டபத்தில் 1864,
செப்படம்பர் 28-ல் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நிறுவப்பட்டது.]

....எண்ணிக்கைப் பலம் என்கிற வெற்றிக்குரிய ஒர் அம்சம் அவர்களிடம் இருக்கிறது, ஆனால், சங்கத்தால் ஒன்றுபடுத்தப்பட்டும் அறிவால் வழி செலுத்தப்பட்டும் வருகிற போதுதான் எண்ணிக்கைப்பலம் தராசுமுனையைத் தம் பக்கம் சாய்க்கும். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளிகளிடையே இருந்து தீர வேண்டிய, விடுதலைக்கு நடத்தும் தங்கள் போராட்டம் அமைத்திலும் ஒருவருக்கொருவர் உறுதியுடன் துணையாக நிற்கும்படியாகத் தூண்டுகிற, சகோதரப் பிணைப்பைப் புறக்கணிப்பதை அவர்களுடைய இணைக்கப்படாத முயற்சிகளின் பொதுத் தோல்வியானது தண்டித்துவிடும் என்று சென்றகால அனுபவம் காட்டியிருக்கிறது.

1864 அக்டோபர்

--------------------------------------------------------------------------------

"சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஜெனரல் கவுன்சிலின் நான்காவது ஆண்டறிக்கை"
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ்

....மிக மிகச் சாதகமான அரசியல் நிலைமைகளிலுங்கூட தொழிலாளி வர்க்கத்தின் உருப்படியான வெற்றி அனைத்தும், அதன் சக்திகளை ஒன்றுபடுத்தித் திரட்டியமைக்கும் ஒர் அமைப்பைச் சார்ந்திருக்கிறது, மற்றும், இன்னமும் அதன் தேசிய அமைப்புங்கூட பிற நாடுகளின் உழைக்கும் வர்க்கங்களின் அமைப்புக் குலைவையொட்டி பிளவுபட்டுப் போக்ககூடிய அபாயமும் உண்டு, இந்த நாடுகள் அமைத்தும் உலகச் சந்தையில் போட்டி போடுகின்றன. ஒன்றின் மீது ஒன்று வினையும் எதிர் வினையும் புரிந்து வருகின்றன. உழைக்கும் வர்க்கங்களின் சர்வதேசப் பிணைப்பு ஒன்று தவிர வேறு எதனாலும் அவர்களுடைய நிர்ணயமான வெற்றியை உறுதிப்படுத்த முடியாது.....

1868 செப்டம்பர் 1

--------------------------------------------------------------------------------

"தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கை"
என்பதிலிருந்து

கா.மார்க்ஸ் - பி.எங்கெல்ஸ்

[லண்டனில் 1871 செப்டம்பர் 17 முதல் 23 வரையில் கூடிய சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின் மாநாட்டின் ஒரு தீர்மானம்]

....சொத்துள்ள வர்க்கங்கள் அமைத்துக் கொண்டுள்ள எல்லாப் பழைய கட்சிகளிடமிருந்தும் வேறுபட்டதாயும், அவற்றிற்கு எதிரானதாயும் உள்ள ஒரு அரசியல் கட்சியாக தொழிலாளி வர்க்கம் தன்னை அமைத்துக் கொள்வதின் மூலமாக அல்லாமல் சொத்துள்ள வர்க்கங்களின் இந்த கூட்டு சக்திக்கு எதிராகத் தொழிலாளி வர்கத்தால், ஒரு வர்க்கம் என்கிற வகையில், செயலாற்ற முடியாது என்று கருதுவதாலும்,

சமுதாயப் புரட்சியின் வெற்றியையும் வர்க்கங்களை ஒழிப்பது என்கிற இறுதிக் குறிக்கோளின் வெற்றியையும் உறுதிப்படுத்துவதற்குத் தொழிலாளி வர்க்கத்தை ஒர் அரசியல் கட்சியாக அமைப்பது இன்றியமையாதது என்று கருதுவதினாலும்,

தொழிலாளி வர்க்கம் தன் பொருளாதாரப் போராட்டங்களின் மூலமாக ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள சக்திகளின் இணைப்பு அதே நேரத்தில் நிலப்பிரபுக்களின், முதலாளிகளின் அரசியல் அதிகாரத்தை எதிர்க்கும் தன்னுடைய போராட்டங்களுக்கு ஒரு நெம்புகோலாகப் பயன்பட வேண்டும் என்று கருதுவதாலும்,

தொழிலாளி வர்க்கத்தின் செயல் துடிப்புற்ற நிலையில் அதன் பொருளாதார இயக்கமும் அதன் அரசியல் நடவடிக்கையும் பிரிக்க முடியாதபடி ஒன்று பட்டுள்ளன - என்று அகிலத்தின் உறுப்பினர்களுக்கு மாநாடு நினைவூட்டுகிறது.

1871 செப்டம்பர் - அக்டோபர்

--------------------------------------------------------------------------------

கோபகன்ஹாகன் நகரிலுள்ள கெர்சன் டிரீயருக்கு
எங்கெல்ஸ் எழுதிய கடிதத்திலிருந்து

லண்டன், 1889, டிசம்பர் 18

....நான் உங்களோடு உடன்படாத ஒரு விஷயத்திலிருந்து தொடங்குகிறேன்.

மற்ற கட்சிகளோடு எந்த ஒரு கூட்டையும், மிகமிகத் தற்காலிகமான கூட்டையும் நீங்கள் கோட்பாடு ரீதியில் நிராகரிக்கிறீர்கள். குறிப்பிட்ட சூழ்நிலைமைகளில் இந்தச் சாதனம் மேலும் அனுகூலமாக இருந்தாலோ அல்லது குறைந்த பட்சம் குறைவான தீங்குள்ளதாக இருந்தாலோ இதையுங்கூட கைவிடாத அளவுக்கு நான் புரட்சியாளன் தான்.

இதில் நாம் உடன்படுகிறோம்: பலவந்தத்தைப் பயன் படுத்துவது அடங்கிய ஒரு புரட்சி இல்லாமல், புதிய சமுதாயத்திற்கான ஒரே நுழைவாயிலாக உள்ள அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளி வர்க்கத்தால் வென்று கொள்ள முடியாது. கணக்குத் தீர்க்கும் நிர்ணயமான நாளில் வெல்வதற்குத் தொழிலாளி வ்ர்க்கம் போதிய
பலமுள்ளதாக இருப்பதற்கு மற்றெல்லாக் கட்சிகளிடமிருந்தும் வேறுபட்டதாயும் மற்றெல்லாக் கட்சிகளுக்கும் எதிரானதாயும் உள்ள ஒரு தனி அரசியல் கட்சியை, தன் வர்க்க அடிப்படையைப் பற்றி உணர்வுள்ள ஒரு கட்சியை, அது அமைக்க வேண்டும். -மார்ர்சும் நானும் இதை 1847 - லிருந்தே எடுத்துப் பேசிவந்திருக்கிறோம்.

ஆனால், இந்தக்கட்சி தன் நோக்கங்களுக்காக சில நேரங்களில் மற்ற கட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று இதற்கு அர்த்தமல்ல. மற்றக் கட்சிகளின் நடவடிக்கைகள் தொழிலாளி வர்க்கத்துக்கு நேரடியாக
அனுகூலமாக இருந்தாலோ, பொருளாதார வளர்ச்சி அல்லது அரசியல் சுதந்திரம் சம்பந்தமாக முற்போக்கானதாக இருந்தாலோ அந்த நடவடிக்கைகளை அது தற்காலிகமாக ஆதரிக்க முடியாது என்றும் அர்த்தமல்ல.

கடிதத்திரட்டு
பக்கம் 386 - 387.

--------------------------------------------------------------------------------

"நம் வேலைத் திட்டம்"
என்பதிலிருந்து

வி.இ.லெனின்

....முற்றிலும் மார்க்சியத் தத்துவார்த்த நிலையின் மீது நாம் நிற்கிளோம், மார்க்சியம் தான் முதன் முதலில் சோஷலிசத்தை கற்பனை என்கிற நிலையிலிருந்து விஞ்ஞானத்தின் நிலைக்கு உருமாற்றிவிட்டது, இந்த விஞ்ஞாத்திற்கு முதன் முதலாக ஓர் உறுதியான அடித்தளமும் போட்டது, அதை அதன் எல்லாப் பகுதிகளிலும் மேலும் வளர்க்கவும் விரிவாக வரையறுத்து விளக்கவும் பின்பற்றப்பட வேண்டிய பாதையையும் முதன் முதலாகச் சுட்டிக் காட்டியது.... ஒரு புரட்சிகரமான சோஷலிஸ்டுக் கட்சியின் உண்மையான பணியை அது இவ்வாறு தெளிவாக்கியது. சமுதாயத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்க வேண்டாம், தொழிலாளிகளின் நிலைமையை மேம்படுத்துவது பற்றி முதலாளிகளுக்கும் அவர்களுடைய அடிவருடிகளுக்கும் உபதேசம் செய்து கொண்டிருக்க வேண்டாம், சதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்க வேண்டாம், ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தைத் திரட்டி அமையுங்கள், இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குங்கள், தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரததை வென்று கொள்வதும் ஒரு சோஷலிசச் சமுதாயத்தை அமைப்பதும் இதன் இறுதிக்
குறிக்கோளாகும்.

1899 அக்டோபர்

--------------------------------------------------------------------------------


"என்ன செய்ய வேண்டும்?"
என்பதிலிருந்து

.....மிகமிக முன்னேறிய தத்துவத்தால் வழி செலுத்தப் படுகிற ஒரு கட்சியால்தான் முன்னணிப் போராளியின் பாத்திரத்தை நிறைவேற்றி வைக்க முடியும்.

1901 - 1902
--------------------

"கம்யூனிஸ்டு அகிலத்தின் அடிப்படையான பணிகள் பற்றிய ஆய்வுரைகள்"
என்பதிலிருந்து

....4 முதலாளித்துவத்தின் மீது வெற்றி பெறுவதற்குத் தலைமை நிலையிலுள்ள [கம்யூனிஸ்டுக்] கட்சிக்கும், புரட்சிகரமான வர்க்கத்துக்கும் [தொழிலாளி வர்க்கத்துக்கும்] மக்களுக்கும் - அதாவது, மொத்தமா உழைப்பவர்கள், சுரண்டப்படுபவர்கள் ஆகியோருக்கும் இடையே முறையான உறவுகள் இருப்பது அவசியம். கம்யூனிஸ்டுக்கட்சி உண்மையிலே புரட்சிகரமான வர்க்கத்தின் முன்னணிப் படையாக இருந்தால் மட்டுமே, அந்த வர்க்கத்தின் எல்லாத் தலைசிறந்த பிரதிநிதிகளையும் தன்னுள் கொண்டதாய் அது இருந்தால் மட்டுமே, விடாப்பிடியான புரட்சிகரமான போராட்டத்தின் அனுபவத்தால் பயிற்சி பெற்றும் பதனிடப்பட்டும் இருக்கும் முற்றிலும் உணர்வுள்ள, உறுதியுள்ள கம்யூனிஸ்டுகளை உடையதாய் அது இருந்தால் மட்டுமே, தன் வர்க்கத்தின் வாழ்க்கை முழுவதுடனும், அதன் வழியாக மொத்தமான சுரண்டப்பட்ட மக்கள் திறளுடனும் பிரிக்க முடியாதபடி தன்னைப் பிணைத்துக் கொள்வதிலும் இந்த வர்க்கத்தின், இந்த மக்கள் திரளின், நம்பிக்கையை முழுவதாக வென்று கொள்வதிலும் அது வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே - அப்படிப்பட்ட கட்சி ஒன்றுதான் முதலாளித்துவத்தின் எல்லாச் சக்திகளுக்கும் எதிரான ஓர் ஓறுதியான, மிகமிக ஈவிரக்கமற்ற, நிர்ணயமான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்துக்குத் தலைமை வகித்துச் செல்ல முடியும். மறுபுறத்தில், அப்படிப்பட்ட ஒரு கட்சியின் தலைமையின் கீழ் மட்டுமே தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான தாக்குதலின் முழுவலிமையை வெளிப்படுத்தவும், முதலாளித்துவத்தால் கெடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கப் பிரபுக்கள், பழைய தொழிற்சங்கத் தலைவர்கள் அடங்கிய சிறிய சிறுபான்மையினரின் தவிர்க்க முடியாத உற்சாமின்மையையும் அவ்வப் பொழுது காட்டும் எதிர்ப்பையும் முறியடிக்கவும் தொழிலாளி வர்க்கத்தால் முடியும் - அப்பொழுதுதான் அது தன் முழு வலிமையைக் காட்ட வல்லது, முதலாளித்துவச் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுக்கோப்பின் காரணத்தால் இந்த வலிமை மக்கள் தொகையிலே அதற்குள்ள வீதாச் சாரத்தை விட எவ்வளவோ பெரியதாகும்.

1920 ஜூன் - ஜூலை

No comments:

Post a Comment