Saturday, February 6, 2010

சோஷலிசமும் மதமும் - லெனின்

சோஷலிசமும் மதமும் - லெனின்

தொழிலாளி வர்க்கப் பெருந் திரளினரை மிகச் சொற்ப சிறுபான்மையோராகிய நிலப் பிரபுக்களது வர்க்கமும் முதலாளிகளது வர்க்கமும் சுரண்டுவதையே முற்றிலும் அடிப்படையாய்ச் கொண்டுள்ளது, இன்றையச் சமுதாயம். இது ஓர் அடிமைச் சமுதாயம். ஏனெனில் "சுதந்திரத்" தொழிலாளர்கள், வாழ்வெல்லாம் முதலாளிகளுக்காக வேலை செய்யும் இவர்கள், லாபத்தின் உற்பத்தியாளர்களான அடிமைகளுடைய பராமரிப்புக்கும், முதாலாளித்துவ அடிமை முறை பாதுகாக்ப்பட்டுத் தொடர்ந்து நீடிப்பதற்கும் அத்தியாவசியமாயுள்ள பிழைப்புச் சாதனங்களை பெறுவதற்கு மட்டுமே "உரிமையுடையோராய்" இருக்கின்றனர்.

தொழிலாளர்கள் மீதான இந்தப் பொருளாதார ஒடுக்குமுறை எல்லா விதமான அரசியல் ஒடுக்குமுறையையும், சமூக இழிநிலையையும், வெகுஜனங்களது ஆன்மீக, அறநெறி வாழ்வின் நறமற்ற இருண்ட நிலையையும் உருவாக்கிய வண்ணமுள்ளது. தொழிலாளர்கள் தமது பொருளாதார விடுதலைக்காகப் போராடுவதற்காக அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அரசியல் சுதந்திரம் பெற்றுக் கொண்டுவிடலாம், ஆனால் அளவிலான சதந்திரத்தாலும் அவர்களுடைய வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஒடுக்கு முறைக்கும் முடிவு கட்டிவிட முடியாது. மிகப் பெருந் திரள்களான மக்களை,ஏனையோருக்காகக்த தாம் செய்யும் ஓயாத வேலையாலும் மற்றும் இல்லாமையாலும் தனிமைப்பாட்டாலும் நசுக்கப்படும் இம்மக்களை, எங்கும்அழுத்தி இருத்திவைக்கும் ஆன்மீக ஒடுக்குமுறையின் பல வடிவங்களில் மதமும் ஒன்றாகும். காட்டு மிராண்டியாய் வாழும் மனிதன் இயற்கைக்கு எதிரான தனது போராட்டத்தில் ஏலாதவனாய் இருக்கும் அவல நிலை எப்படித் தேவதைகளிலும் சைத்தான்களிலும் அற்புதங்களிலும் பிறவற்றிலும் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறதோ அதே போல, சுரண்டப்படும் வர்க்கங்கள் சுரண்டுவோருக்கு எதிரான தமது போராட்டத்தில் ஏலாதவையாய் இருக்கும் அவல நிலையானது மறுமையில் சிறப்பான வாழ்வு உண்டென்பதில் தவிர்க்க முடியாதவாறு நம்பிக்கையை உண்டாக்குகிறது. வாழ்நாள் முழுதும் உழைத்து, இல்லாமையால் துன்புறுவோர் மண்ணுலகில் அடிபணிந்து பொறுமையாய் இருக்கவும், விண்ணுலகில் நற்பேறுகிட்டுமென்ற நம்பிக்கையால் மன ஆறுதல் பெறவும் மதம் அவர்களுக்குப் போதிக்கிறது. ஆனால் ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்வோர் மண்ணுலகில் தர்மவான்களாய் வாழ்வதற்கு மதம் அவர்களுக்குப் போதிக்கிறது, சுரண்டலாளர்களாய் அவர்கள் நடத்தும் வாழ்க்கை அனைத்துக்கும் நியாயம் கற்பித்துக் கொள்ள இவ்விதம் அது மிக எளியமையான ஒரு வழியை அளிப்பதோடு, விண்ணுலக இன்ப வாழ்வுக்கும் மிதமான விலையில் அவர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கிறது. மக்களது அபினியே மதம். ஒருவகை ஆம்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஒரளவேனும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் அடிமை தனது அடிமை நிலையை உணர்ந்து கொண்டு தனது விடுதலைக்காகப் போராட முற்படுகையில் ஏற்கனவே பாதி அளவுக்கு அடிமை நீக்கம் பெற்றவனாகிவிடுகிறான். வர்க்க உணர்வு படைத்த நவீன காலத் தொழிலாளி, பெருவீத ஆலைத் தொழிலால் வளர்த்து ஆளாக்கப்பட்டு நகர வாழ்வினால் ஒளியூட்டப் பெற்ற இந்தத் தொழிலாளி, மதத்தின் தப்பெண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, விண்ணுலக வாழ்வைக் குருமார்களிடத்தும் முதலாளித்துவப் பித்தர்களிடத்தும் விட்டுவிட்டு, தனக்கு இங்கே மண்ணுலகில் நல்வாழ்வைப் போராடிப் பெற முயலுகின்றான். இன்றையப் பாட்டாளி வர்க்கம் சோஷலிசத்தின் பக்கம் அணிதிரளுகின்றது. சோஷலிசமானது மதத்தின் இருளுக்கு எதிரான போரில் விஞ்ஞானத்தைப் படைசேர்த்துக் கொள்கிறது, இப்பொழுதே இம்மையில், மண்ணுலகில் நல்வாழ்வுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்வதன் மூலம், அது அவர்களை மரணத்துக்குப் பிற்பாடான மறுமையில் நம்பிக்கை வைப்பதிலிருந்து விடுவிக்கிறது.

மதம் தனிநபரின் சொந்த விவகாரமாய்ப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் - இச்சொற்களின் வாயிலாய், சோஷலிஸ்டுகள் மதத்தின் பால் தமக்குள்ள போக்கை வழக்கமாய்ப் பிரகடனம் செய்கின்றனர். ஆனால் எவ்விதமான தப்பு அபிப்பிராயமும் ஏற்படாமல் தடுப்பதற்காக, இச்சொற்களின் பொருளைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும். அரசைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக்கபட வேண்டுமென நாம் கோருகிறோம். ஆனால் நமது கட்சியைப் பொறுத்த மட்டில் எவ்விததிலும் நாம் மதத்தைத் தனிநபரின் சொந்த விவகாரமாய்க் கருத முடியாது. மதம் அரசின் கருத்துக்குரியதாய் இருக்கக் கூடாது, மத நிறுவனங்கள் அரசாங்க அதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தம் விருப்பம் போல் எந்த மதத்தையும் கடைப்பிடத்து ஒழுகவும், எம்மதத்தையும் சேராதவராய் இருக்கவும் - அதாவது பொதுவாய் ஒவ்வொரு சோஷலிஸ்டும் இருந்து வருவது போல, நாத்திகராய் இருக்கவும் - பூரண உரிமை பெற்றிருக்க வேண்டும். குடிமக்களின் மத நம்பிக்கைகைள் காரணமாய் அவர்களிடையே எவ்விதமான பாகுபாட்டுக்கும் இடமளிப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது. அரசாங்கப் பத்திரங்களில் குடிமகனுடைய மதத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதுங்கூட நிச்சயமாய் விட்டொழிக்கப்பட வேண்டும். அரசாங்க மதச்சபைக்கு மான்யங்கள் வழங்ககப்படலாகாது, மதச்சபை, சமயக் கழகங்களுக்கு அரசாங்க உதவித் தொகை எதுவும் அளிக்கப்படலாகாது. இவை யாவும் அரசைச் சாராத நிறுவனங்களாகிவிட வேண்டும், ஒத்த மனத்தோராகிய குடி மக்களது முற்றிலும் சுதந்திரமான நிறுவனங்களாகிவிட வேண்டும். இந்த கோரிக்கைகள் பூரணமாய் நிறைவேற்றப்படும் போதுதான், அவமானகரமான, கேடுகெட்ட அந்தக் கடந்த காலத்துக்கு முடிவு கட்ட முடியும் - மதச்சபையானது அரசுக்குப் பிரபுத்துவ முறையில் அடிபணிந்தும், ருஷ்யக் குடிமக்கள் மதச்சபைக்குப் பிரபுத்துவ முறையில் அடிபணிந்தும் கட்டுண்டு வாழ்ந்த அந்தக் காலத்துக்கு, மத்திய காலத்திய, இன்க்விசிஷன் சட்டங்கள் [சமயத் துறை ஒடுக்குமுறைக்குரிய கொடுஞ் சட்டங்கள்- மொ-ர்] நடப்பில் இருந்தும், செயல்படுத்தப்பட்டும் வந்த அந்தக் காலத்துக்கு [இது நாள்வரை நமது குற்றவியல் சட்டத் தொகுப்புகளிலும் மற்றும் நமது பொதுச் சட்டங்களிலும் இவை தொடர்ந்து நீடித்து வருகின்றன], இச்சட்டங்களின் படி குடிமக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளுக்காகவும் தண்டித்துக் கொடுமை செய்யப்பட்டும், மனித மனசாட்சிக்கும் பங்கம் உண்டாக்கப்பட்டும், சொகுசான அரசாங்கப் பதவிகளும், அரசாங்கத்தின் வாயிலாய்க் கிடைக்கும் வருமானங்களும், அரசாங்க மதச்சபையின் ஏதேனும் ஒரு வகைப்பட்ட அபினியின் வினியோகத்துடன் இணைக்கப்பட்டும் வந்த அந்த அவமானகரமான, கேடுகெட்ட காலத்துக்கு முடிவு கட்ட முடியும். மதச்சபையும் அரசும் அறவே தனித்துப் பிரிக்கப்பட வேண்டும் என்று நவீன கால அரசிடமிருந்தும் நவீன கால மதச்சபையிடமிருந்தும் சோஷலிசப் பாட்டாளி வர்க்கம் கோருகின்றது.

அரசியல் சுதன்திரத்தின் அத்தியாவசிய உள்ளடக்கக் கூறுகளில் ஒன்றாய் ருஷ்யப் புரட்சி இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது சம்பந்தமாய், ருஷ்யப் புரட்சியானது குறிப்பிடத்தக்க அளவுக்குச் சாதகமான நிலையில் இருக்கிறது. ஏனென்றால் போலீஸ் ஆதிக்கப் பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தின் வெறுப்பூட்டும்அதிகார ஆணவம் மதக் குருமார்களிடத்துங்கூட அதிருப்தியையும் சலசலப்பையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியிருக்கிறது. ருஷ்யச் சத்திய சமயப் பாதிரியினர் [Russian Orthldox clergymen] எவ்வளவுதான் இழிவுற்று அறியாமைன இருளில் மூழ்கியிருப்பினும், ருஷ்யாவில் பழைய, மத்திய காலத்திய அமைப்பு தகர்ந்து விழும் இடியோசையால் இவர்களுங்கூட இப்பொழுது தட்டியெழுப்பப்பட்டுள்ளனர். சுதந்திரம் வேண்டுமெனக் கோருவோருடன் இவர்களும் சேர்ந்து வருகின்றனர், அதிகாரவர்க்க நடைமுறைகளையும் அதிகார ஆணவத்தையும் எதிர்த்து, போலீஸ் உளவாளிகளாய் வேலை செய்யும் பணி "ஆண்டவனது ஊழியர்கள்" மீது திணிக்கப்படுவதை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்புகின்றனர். சோஷலிஸ்டுகளாகிய நாம் இந்த இயக்கத்துக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும், பாதிரிமார் தொகுதியைச் சேர்ந்த நேர்மையான உறுப்பினர்களின் கோரிக்கைகளை அவற்றின் இறுதி முடிவுகளுக்கு எடுத்துச் சென்று, சுதந்திரத்தைப் பற்றி அவர்களது சொற்களுக்கு ஏற்ப அவர்களைச் செயல்படுமாறு வைக்க வேண்டும், மதத்துக்கும் போலீசுக்குமுள்ள எல்லாப் பந்தங்களையும் உறுதியாய் நின்று துண்டித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கோர வேண்டும். ஒன்று, நீங்கள் நேர்மையனோராய் இருக்க வேண்டும் - அப்படியானால், மதச்சபையும் அரசும், மற்றும் பள்ளிக்கூடமும் மதச்சபையும் அறவே தனித்துப் பிரகடனம் செய்யப்படுதலை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், சுதந்திரத்துக்குரிய இந்த முரணற்ற கோரிக்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆவீர்கள் - அப்படியானால், மத்திய காலச் சமயத் துறை ஒடுக்குமுறையின் பாரம்பரியங்களால் இன்னமும் கட்டுண்டுதான் இருக்கத்தின் வாயிலாய்க் கிடைக்கும் வருமானங்களுடனும் அரசாங்கத்தின் வாயிலாய்க் கிடைக்கும் வருமானங்களுடனும் இன்னமும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறீர்கள், உங்களுடைய ஆயுதத்தின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை இல்லாமல் தொடர்ந்து அரசிடமிருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகிவிடுகிறது. அப்படியானால், அனைத்து ருஷ்யாவையும் சேர்ந்த வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் உங்கள் மீது ஈவிரக்கமில்லாப் போர் தொடுப்பதாய்ப் பிரகடனம் செய்கின்றனர்.

சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியைப் பொறுத்த மட்டில், மதம் தனிநபரது சொந்த விவகாரமல்ல. நமது கட்சி தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் வர்க்க உணர்வு கொண்ட, முன்னேறிய வீரர்களை ஒரசேர இணைக்கும் கழகமாகும். இப்படிப்பட்ட ஒரு கழகம் மத நம்பிக்கைகளின் வடிவிலாகிய வர்க்க உணர்வின்மை, அறியாமை, அல்லது மூடத்தனம் குறித்து பராமுகமாய் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. மதத்தின் இருளை முற்றிலும் சித்தாந்த ஆயுதங்களைக் கொண்டு, சித்தாந்த ஆயுதங்களை மட்டுமே கொண்டு, நம்முடைய எழுத்தும் பேச்சுமாகிய பிரசாரத்தைக் கொண்டு போராடும் பொருட்டு, மதச்சபையானது அரசால் நிறுவப்பட்டதாய் இருக்கும் நிலை அறவே நீக்கப்பட வேண்டுமெனக் கோருகிறோம். மதத்தின் மூலமான எல்லா வித மாய்மாலங்களாலும் தொழிலாளர்கள் ஏய்க்கப்படுவதை எதிர்த்து இப்படி ஒரு போராட்டம் நடத்தும் பொருட்டே ருஷ்யாவின் சமுக - ஜனநாயத் தொழிலாளர் கட்சியாகிய நமது கழகத்தை நாம் நிறுவிக் கொண்டோம். ஆகவே நமக்குச் சித்தாந்தப் போராட்டம் தனிநபரது சொந்த விவகாரமல்ல, கட்சி அனைத்துக்கும், பாட்டாளி வர்க்கம் அமைத்துக்கும் உரிய விவகாரமாகம்.

அப்படியானால், நாம் நாத்திகர்கள் என்று நமது வேலைத்திட்டத்தில் நாம் ஏன் அறிவிக்கவில்லை? கிறிஸ்தவர்களும் தெய்வ நம்பிக்கையுடைய ஏனையோரும் நமது கட்சியில் சேரக்கூடாதென்று நாம் ஏன் தடை போடவில்லை?

இந்தக் கேள்விக்குரிய பதில், மதத்தைப் பற்றிய பிரச்சினையை அணுகும் முறையில் முதலாளித்துவ - ஜனநாயகவாதிகளுக்கும் சமூக - ஜனநாயகவாதிகளுக்கு முள்ள மிகவும் முக்கியமான வேறுபாட்டை விளக்க உதவியாய் இருக்கும்.

நமது வேலைத்திட்டம், முற்றிலும் விஞ்ஞான வழிப்பட்டதோடல்லாமல் முற்றிலும் பொருள்முதல்வாதமுமாகிய உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாய்க் கொண்டதாகும். ஆகவே நமது வேலைத்திட்டத்தின் விளக்கத்தில் மதத்தாலான இருளின் மெய்யான வரலாற்று, பொருளாதார வேர்களைப்பற்றிய விளக்கமும் இன்றியமையாதவாறு உள் அடங்கியிருக்கிறது. நமது பிரசாரத்தில் நாத்திகப் பிரசாரமும் இன்றியமையாதவாறு உள்ளடங்கியிருக்கிறது. எதேச்சாதிகாரப பிரபுத்துவ அரசாங்கத்தால் இதுகாறும் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் பொருத்தமான விஞ்ஞான இலக்கியத்தை வெளியிடுவது இப்பொழுது நமது கட்சிப் பணியின் அரங்குகளில் ஒன்றாய் அமைய வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சு அறிவொளி இயக்கப் பெருமக்களும் நாத்திகர்களும் எழுதியவற்றை மொழிபெயர்த்து விரிவாய்ப் பரப்ப வேண்டுமென்று முன்பு ஜெர்மன் சோஷலிஸ்டுகளுக்கு எங்கெல்ஸ் கூறிய ஆலோசனையை இப்பொழுது நாம் பின் பற்ற வேண்டி வரலாம்.

ஆனால் எந்த நிலைமையிலும் நாம், முதலாளித்துவ வர்க்கத்தாரைச் சேர்ந்த தீவிர - ஜனநாயவாதிகள் அடிக்கடி செய்வது போல, மதத்தைப் பற்றிய பிரச்சினையைக் கருத்தியலான, கருத்துமுதல்வாதப் பாணியில், வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தமில்லாத "அறிவுத்துறைப்" பிரச்சினையாய் முன்வைக்கும் தவறான பாதையில் சென்றுவிடக் கூடாது. தொழிலாளி வெகுஜனங்கள் முடிவின்றி தொடர்ந்து ஒடுக்கப் படுவதையும் நயம் கெடுக்கப்படுவதையும் அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், மத மூடநம்பிக்கைகளை வெறும் நுகத்தடியின்கீழ் வதைபடுவது, சமுதாயத்திலுள்ள பொருளாதார நுகத்தடியின் விளைவும் பிரதிபலிப்புமே ஆகுமென்பதை மறப்பது முதலாளித்துவக் குறுகிய பார்வையையே குறிக்கும். முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் தானே போராடுவதன் மூலம் அது அளிவொளி பெறாத வரை, எத்தனைப் பிரசுரங்களை வெளியிட்டாலும், எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் அதை அறவொளி பெறச் செய்துவிட முடியாது. மண்ணுலகில் ஒரு சுவர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினுடைய மெய்யான இந்தப் புரட்சிப் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது, விண்ணுலகச் சுவர்க்கம் குறித்து பாட்டாளி வர்க்கத்தோரிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்கியமானது.

எனவே தான் நமது நாத்திகத்தை நமது வேலைத்திட்டத்தில் நாம் அறிவிக்கவில்லை, அறிவிக்கவும் கூடாது, எனவே தான் தமது பழைய தப்பெண்ணங்களில் இன்னமும் மீதமிச்சங்கள் சிலவற்றை விட்டொழிக்காது வைத்திருக்கும் பாட்டாளிகள் நமது கட்சியுடன் வந்து இணைவற்கு நாம் தடைபோடவில்லை, போடவும் கூடாது. எப்பொழுதும் நாம் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தையே பிரசாரம் செய்வோம். பல்வேறு "கிறிஸ்தவப் பிரிவினரது" முரணான கருத்துக்களை நாம் எதிர்த்துப் போராடுவது அவசியமே. ஆனால் மதப் பிரச்சினையை அதற்குச் சிறிதும் உரித்தாய் இராத முதல் நிலைக்கு முன்கொண்டுவர வேண்டுமென்று ஒருபோதும் இதற்கு அர்த்தமல்ல. மூன்றாம் தர அபிப்பிராயங்கள் அல்லது மூடக் கருத்துக்களை முன்னிட்டு, வேகமாய் அரசியல் முக்கியத்துவத்தை அறவே இழந்து, பொருளாதார வளர்ச்சியின் கோக்கினாலேயே வேகமாய்க் குப்பை குழியிலே ஒதுக்கித் த ள்ளப்பட்டு வரும் இவற்றை முன்னிட்டு, மெய்யாகவே புரட்சிகரமான பொருளாதார, அரசியல் போராட்டத்தின் சக்திகள் பிளவுபடுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டுமென்றும் இதற்கு அர்த்தமல்ல.

பிற்போக்குவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் மதப் பூசலைத் தூண்டிவிடுவதில் எங்குமே கருத்து செலுத்தி வந்துள்ளனர், இப்பொழுது ருஷ்யாவில் கருத்து செலுத்த முற்பட்டு வருகின்றனர் - இதன் மூலம் இவர்கள் வெகுஜனங்களுடைய கவனத்தை, அனைத்து ருஷ்யாவையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கமானது புரட்சிப் போராட்டத்தில் ஒன்று பட்டு நடைமுறையில் தற்போது தீர்வு கண்டு வரும் மெய்யாகவே முக்கியமான, அடிப்படையான பொருளாதார, அரசியல் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பிவிட முயலுகின்றனர். பாட்டாளி வர்க்க சக்திகளைப் பிளவுபடுத்தும் இந்தப் பிற்போக்கக் கொள்கை இன்று பிரதானமாய்க் கறுப்பு நூற்றுவரின் கொலைத் தாண்டவங்களின் வடிவில் வெளிப்படுகிறது, நாளைக்கு இக்கொள்கை இன்னும் நுட்பநயமான வேறு வடிவங்களை வகுத்துக் கொள்ளக் கூடும். எப்படியும் நாம் அமைதியாகவும் முரணின்றியும் பொறுமையுடனும் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் விஞ்ஞான உலகக் கண்ணேட்டத்தையும் போதித்து இந்தப் பிற்போக்குக் கொள்கையை எதிர்ப்போம் - நாம் போதிப்பது இரண்டாந்தரமான வேறுபாடுகளுக்கு எவ்வகையிலும் தூபமிடுதலுக்கு அன்னியமான ஒன்றாகும்.

அரசு சம்பந்தப்பட்ட மட்டில் மதத்தை மெய்யாகவே தனிநபரது சொந்த விவகாரமாக்குவதில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் வெற்றி வாகை சூடும். மத்திய காலத்தியப் பூசணம் துடைத்து அகற்றப்பட்டு சுத்த மாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பில், பாட்டாளி வர்க்கமாமனது மதத்தின் மாய்மாலத்தால் மனிதகுலம் ஏய்க்கப்படுவதற்கு மெய்யான மூல காரணமாகிய பொருளாதார அடிமை நிலையை ஒழிப்பதற்காக விரிவான, பகிரங்கமான போராட்டம் நடத்தும்.
1905 டிசம்பர் 3

No comments:

Post a Comment